விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை!

ஸ்டூடியோ 9 என்ற பட நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.கே.சுரேஷ், அந்த நிறுவனம் சார்பில் ‘தர்மதுரை’ ‘சலீம்’ உள்பட சில படங்களை தயாரித்து இருக்கிறார். டைரக்டர் பாலா, ‘தாரை தப்பட்டை’ படத்தில் இவரை வில்லனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்த ஆர்.கே.சுரேஷ், பின்னர் கதாநாயகன் ஆனார்.

அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் படம், தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. படத்துக்கு, ‘கொச்சின் ஷாதி அட் சென்னை-03’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. சுரேஷ் நடித்து இருக்கிறார்.
 
இது, திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட மர்ம படம். ஒரு பெரிய இடத்து பையன் பல பெண்களை காதலித்து ஏமாற்றுகிறான். அவனிடம் ஏழைப்பெண் ஷாதிகா ஏமாந்து கர்ப்பம் ஆகிறாள். கருவை கலைக்க சென்னைக்கு வருகிறாள். அவளுக்கு என்ன நேர்கிறது? என்பதே கதை. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னைக்கு பயணிக்கும் இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் 70 சதவீதம் தமிழும், 30 சதவீதம் மலையாளமும் பேசுகின்றன. மலையாள டைரக்டர் மஞ்சித் திவாகர் டைரக்டு செய்திருக்கிறார். அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்துள்ளார்.
 
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்.கே.சுரேஷ், “ஒரு தமிழனாக மலையாளப் படத்தில் கதாநாயகனாக நடிப்பது குறித்து பெருமைப்படுகிறேன். இந்த படம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்” என்றார்.
 
அப்போது அவரிடம் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள் தான் ஆகிறது. அதனால்பொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது.மறைந்த என்னுடைய அன்பு அண்ணன் ஜே கே.ரித்தீஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக நான் என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் நிச்சயமாக செய்வேன். நிச்சயமாக விஷால் தவிர வேறு யார் நின்றாலும் அந்த அணிக்கு எனது ஆதரவு கட்டாயம் உண்டு” என கூறினார்.
 
மேலும், விஷால் மீது தனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும் இல்லை என்றும் நல்ல நட்புடன் தான் இருப்பதாகவும் சங்கம் பொறுப்பு என வரும்போது விஷாலால் அதை சரிவர செய்ய முடியவில்லை என்றும் அவர் நல்ல நடிகர், அவர் இன்னும் நிறைய படங்களில் டென்ஷன் இல்லாமல் நடிக்க வேண்டும் அதனால் இந்த பொறுப்புகளிலிருந்து அவரை நாம் விடுவித்து ரிலாக்ஸ் செய்ய விடுவோம் என கூறியுள்ளார் ஆர்.கே.சுரேஷ்.

Comments