இளையராஜா விவகாரம் ; 96 பட இசையமைப்பாளர் பதில்!

96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்த இளையராஜாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, என்னவானாலும் தான் இளையராஜாவின் ரசிகன் என்று கூறியிருக்கிறார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. படத்தில் இளையராஜாவின் பிரபல பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள்.
 
இதுபற்றி இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.
 
இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னவானாலும் இளையராஜாவின் ரசிகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments