ஐசரி கணேஷின் ‘ வேல்ஸ் ஃபிலிம் இண்டர் நேஷனல்’ நிறுவனம் தயாரிக்க ‘ஜெயம்’ ரவி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தின் டைட்டில் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘கோமாளி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க, இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறாராம்!
ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் என்று 9 வேடங்களில் நடிக்கிறார். இந்த வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுதா ஹெக்டே என்று இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ‘யோகி’ பாபு இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் இப்படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். தொழில்நுடப் துறையில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்றைய உலகையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நகைச்சுவையாக சித்தரிக்கும் படமாம் ‘கோமாளி’.
தமிழ் சினிமாவில் ‘நவராத்திரி’ படத்தில் முதல் முறையாக 9 வேடங்களில் நடித்தவர் சிவாஜி கணேசன். இவரை தொடர்ந்து ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அந்த வரிசையில் இப்போது ஜெயம் ரவி ‘கோமாளி’ படத்தில் 9 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment