நக்கல் மன்னன், நய்யாண்டி அரசன் கவுண்டமணிக்கு நேற்று 80 வது பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் கால் நூற்றாண்டை தனது காமெடியால் வசப்படுத்தி வைத்திருந்தவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நேற்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.நக்கல் வசனங்கள் மூலமாகவும், நய்யாண்டி நகைச்சுகை மூலமாகவும் மக்களை கவர்ந்த கவுண்டமணி, இளம் வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கியதோடு, 1964 ஆம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படத்திலேயே சினிமாவுக்குள் எண்ட்ரியானாலும், அவரை ஒரு நடிகராக அடையாளம் காட்டியது

பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படம் தான். அப்படத்தில் அவர் பேசிய ‘பத்த வஞ்சிட்டியே பரட்ட” வசனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அப்படத்தில் இருந்து கவுண்டமணிக்கு தனியாக காமெடி டிராக் எழுதும் அளவுக்கு அவரை உயர்த்தியது.
 
சீனியர் நடிகர்களாக இருந்தாலும் சரி, இளம் நடிகர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் நடிக்கும் கவுண்டமணியின் ஸ்பெஷலே அவரது டைமிங் தான். சோலோவாகவே காமெடி மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர், பிறகு செந்திலை தன்னுடன் சேர்த்துக்கொண்டு செய்த நகைச்சுவை அனைத்தும் என்று மறக்க முடியாதவைகளாக உள்ளது.
 
எந்த ஹீரோவுடன் இணைந்து நடித்தாலும், தனது காமெடி மூலம் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதில் வல்லவரான கவுண்டமணி, சத்யராஜுடன் சேர்ந்து அடித்த லூட்டிகள் அனைத்தும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும்.
 
தற்போது நடிப்பதை குறைத்துக் கொண்டாலும், சினிமாவில் என்ன நடக்கிறது, என்பதை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறிந்துக்கொள்ளும் கவுண்டமணி, பத்திரிகை, டிவி சேனல் உள்ளிட்ட ஊடகங்களில் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருபவர், சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வருபவர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக தற்போதும் திகழ்கிறார்.
 
படங்களில் நடிப்பதை கவுண்டமணி குறைத்துக் கொண்டாலும், அவர் தொலைக்காட்சிகள் மூலமாக தினமும் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருப்பவர், சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைந்துக் கொண்டு தான் இருக்கிறார்.
 
இப்படி புகழ் வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், அவரது நகைச்சுவை மூலம் இன்னமும் மக்களை சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் கவுண்டமணிக்கு பிறந்தனாள் வாழ்த்துகள்.

Comments