வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’. இந்த படத்தை இயக்கிய சிம்பு தேவன், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக முடிவெடுக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்தில் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின்
படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும் படக்குழுவினருக்கும் இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட, இப்படத்திலிருந்து விலகினார் வடிவேலு. இதனை தொடர்ந்து இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு சென்றார் தயாரிப்பாளர் ஷங்கர். இருப்பினும் இன்னும் இந்த பட பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து சிம்பு தேவன் அடுத்த படத்தை இயக்குவதறகான முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் சிம்பு தேவன் அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிம்பு தேவன அடுத்து இயக்கும் படம் ‘கசட தபற’. வித்தியாசமான தலைப்பில் உருவாகும் இந்த படத்தை வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’யும், ரவீந்திரனின் ‘டிரைடன்ட் ஆர்டஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் குறித்த மற்ற அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில்
இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 இசை அமைப்பாளர்கள், 6 படத்தொகுப்பாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த படத்தில் பணி புரிய இருக்கும் 6 படத்தொகுப்பாளர்களை பிரபல படத்தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் இன்று மாலை 6 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளார் என்ற தகவலை வெங்கட் பிரபு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹீரோக்கள், ஹீரோயின்கள், இசை அமைப்பாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Comments
Post a Comment