விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான். இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.
இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், ‘களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தனது கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சில சிறு முதலீட்டு படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், பிறகு சினிமாவில் ஒரு நடிகராக நிலைத்து நிற்க வேண்டும் என்பதால் கதை தேர்வில் கவனம் செலுத்தியதோடு, சிறு வேடமாக இருந்தாலும், பெயர் சொல்லும் வேடமாக இருப்பதோடு, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணியதோடு, அதற்காக காத்திருக்கவும் முடிவு செய்தார்.
அதன்படி, சற்குணம் கண்ணில் பட்டவருக்கு களவாணி 2 படத்தில் மெயின் வில்லன் வேடம் கிடைத்தது. அதுவும் அரசியல்வாதி வேடம். கிடைத்த வேடத்தை சரியாக பயன்படுத்தி, இயக்குநர் சற்குணமிடம் பாராட்டு பெற்றவர் அப்படியே சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் வாய்ப்பும் பெற்று வருகிறார்.
இருப்பினும் தான் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களை இயக்குநரின் அனுமதி இல்லாமல் வெளியே சொல்லாமல் இருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராவதோடு, பிரகாஷ்ராஜ், ரகுவரன் போன்றவர்களின் வரிசையில் அதிரடி வில்லனாகவும் வலம் வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், என்று கூறும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், திடீரென்று தோன்றி திடீரென்று மறையும் நட்சத்திரமாக இல்லாமல், மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்களின் நட்சத்திரமாக இருப்பதற்காகவே சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார்.
அப்படி அவர் எடுத்து வைத்த முதல் அடியான ‘களவாணி 2’ படம் மூலம் மக்கள் கொடுத்த ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்தை போல அவர் மக்கள் மத்தியில் ஜொலிக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.
Comments
Post a Comment