கன்னடத்தில் வெளியான ‘யூ – டார்ன்’ படத்தின் மூலம் பாப்புலரானவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. கடந்த ஏப்ரலில் வெளியான மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தாலும், நிவின்பாலி தமிழில் நடித்துவரும் ‘ரிச்சி’ படத்தின் நாயகியாக நடித்தாலும் கூட, இவர் நாயகியாக நடித்துள்ள முதல் தமிழ்ப்படம் என்றால் அது இந்தவாரம் வெளியாக இருக்கும் ‘இவன் தந்திரன்’ படம் தான்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் மிகவும் வித்யாசமான பாத்திரமாம் “படத்தில் நான் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். இங்கே உள்ள கல்வி முறையும் அதில் இருக்கும் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும்” என தனது கதாபாத்திரம் குறித்து ஹின்ட் கொடுக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..
இந்தப்படத்திற்காக இவர் ரொம்ப வேகமாகவே தமிழ் கற்றுக்கொண்டாராம். “இவன் தந்திரன் தான் ஒரு கதாநாயகியாக எனக்கு முதல் தமிழ் படம். எனக்கு நீளமான வசனம், உணர்வுபூர்வமான காட்சிகள் போன்றவை எல்லாம் இந்த படத்தில் சவாலான ஒன்றாக இருந்தது. நான் RJ பாலாஜியை காற்று வெளியிடை படபிடிப்பின் போது சந்தித்தேன். நான் தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த சந்தேகமாக இருந்தாலும் பாலாஜியிடம் கேட்பேன். என்னுடைய முதல் படத்தில் இருந்து அவரை நன்றாக தெரியும் என்பதால் அவரிடம் தமிழ் சினிமாவை பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொள்வேன். தமிழ் பேசும் லோக்கல் பெண்ணாக நடித்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..
Comments
Post a Comment