சஞ்சய் தத்தை மணந்தாரா பாலிவுட் நடிகை ரேகா?

பிரபல பாலிவுட் நடிகை ரேகா, நடிகர் சஞ்சய் தத்தை ரகசிய திருமணம் செய்ததாக பரவும் தகவல்கள் வெறும் வதந்தியே; அதில் எள்ளளவும் உண்மை இல்லை,'' என, ரேகாவின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ள, எழுத்தாளர் யாசிர் உஸ்மான் தெரிவித்து உள்ளார்.
தமிழ் திரையுலகில், 'காதல் மன்னன்' என, ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் மகள் ரேகா, 62. ஏராளமான பாலிவுட் படங்களில், கதாநாயகியாக நடித்துள்ள இவர், பல்வேறு கால கட்டங்களில் சக நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு உள்ளார். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ரேகாவும் ஜோடியாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இளம் வயதில் இருவரும், ஒருவரையொருவர் காதலித்ததாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது.
 
இன்றும், ஏதேனும் ஒரு விழாவில் இருவரும் ஒரே மேடையில் தோன்றினால், ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவது வழக்கம். இந்நிலையில், ரேகாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, 'ரேகா: தி அன்டோல்டு ஸ்டோரி' என்ற தலைப்பில், எழுத்தாளர் யாசிர் உஸ்மான் புத்தகம் எழுதியுள்ளார்.அந்த புத்தகத்தில், நடிகர் சஞ்சய் தத்தும், ரேகாவும் ரகசிய திருமணம் செய்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, பாலிவுட் திரை நட்சத்திரங்களை மட்டுமின்றி, ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தன் புத்தகத்தில், ரேகா - சஞ்சய் தத், 57, திருமணம் செய்ததாக எவ்வித தகவலும் இடம் பெறவில்லை என, யாசிர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, எழுத்தாளர் யாசின் உஸ்மான் கூறியதாவது:நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எழுதப்பட்டுள்ள புத்தகத்தில், சர்ச்சைக்குரிய வகையிலான தகவல்கள் எதுவும் இடம் பெறவில்லை. 1984ல் வெளியான, ஜமீன் ஆஸ்மான் என்ற ஹிந்தி திரைப்படத்தில், சஞ்சய் தத்தும், ரேகாவும் இணைந்து நடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், இதை தொடர்ந்து இருவரும் ரகசிய திருமணம் செய்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
 
அப்போது, திடீரென தானாக முன்வந்து, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த சஞ்சய் தத், 'நடிகை ரேகா உடனான ரகசிய திருமணம் குறித்த வதந்தி பொய்' என, கூறினார். 'சஞ்சய் தத் தானாக முன்வந்து திடீரென பேட்டியளித்தது, ரேகாவுடனான ரகசிய திருமணத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்ததாக இருந்தது' என்றே, அந்த புத்தகத்தில் எழுதியுள்ளேன். வாசகர்கள் என் கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சஞ்சய் தத் - ரேகா இருவரும் திருமணம் செய்தனர் என, நான் ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. அது போல் வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தியே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments