நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும் ; அப்போதுதான் தயாரிப்பாளர்கள் வலி தெரியும் : நடிகர் ஸ்ரீகாந்த்!
நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும்; அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி தெரியும் என்று நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வருகிற ஏப்ரல் 2-ல் நடைபெறவுள்ளது. களத்தில் 5 அணிகள் மோதுகின்றன.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ சார்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அந்த அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வாசித்து அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசும் போது,
இன்னும் எவ்வளவு நாள்தான் மேடைதோறும் பணத்தை இழந்தோம், மரியாதையை இழந்தோம், நிம்மதியை இழந்தோம், கடனாளியாகி விட்டோம்,தெருவுக்கு வந்து விட்டோம் என்று தயாரிப்பாளர்களின் வருத்தத்தையும் வலியையும் மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம்?
நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி தெரியும் ஒரு படம் எடுத்துப் பார். அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி என்ன என்பது தெரியும்.அந்த வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன், நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும். இப்போது கூட எல்லா நடிகர்களும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள்.நல்லது வரட்டும்,வந்து உணரட்டும்.
ஒரு நடிகனாக நடிகர் சங்கத்தில் வாக்களித்தது நல்ல மாற்றம் வரும் என்கிற நம்பிக்கையில்தான். அதை நான் இன்னமும் இழக்கவில்லை. ஆனால் எனக்கு இப்போது ஒரு கேள்வி எழுகிறது. நடிகர்களுக்காகப் பணியாற்றுவீர்கள் என்றுதான் உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால் அநதப் பணியை முடிக்காமல் இன்னொரு வேலையையும் பார்ப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? எப்படி ஒருவர் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் நிர்வாகத்துக்கு குரல் எழுப்ப முடியும்? எப்படி இரண்டு பேருக்கும் குரல் எழுப்ப முடியும்?
இரண்டு இடத்திலும் ஒருவரே இருந்தால் அது ஜனநாயகம் இல்லையே.
இங்கே இருக்கும் இவர்கள் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாதவர்கள் . இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் வலி தெரிந்தவர்கள்தான் வரவேண்டும் தங்கள் சுயநலத்துக்கு படமெடுப்பவர்களுக்கு தயாரிப்பாளர்களின் வலி தெரியாது . இந்த அணி நிச்சயம் வெற்றி பெறும் ”என்றார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் வேட்பாளரான ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது,
இதுவரை கடந்த காலங்களில்அமைதியாக ஆரவாரமின்றி தேர்தல்கள் நடந்திருக்கின்றன .இன்றைய சூழ்நிலையில் பரபரப்பாக ஆர்பாட்டமாக நடக்கிறது. இந்தச் சூழலுக்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் யாரையும் எதிரிகளாகப் பார்ப்பது இல்லை.
கடந்த காலத்தில் பெரிய ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி அவர்கள் காலம் முதல், பிறகு
வந்த ரஜினி, கமல்,விஜயகாந்த்,சரத்குமார் அவர்கள் காலம் வரை எண்ணற்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்தபோது கூட எந்தச் சூழலிலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் ஈடுபடுத்திக் கொண்டதில்லை.தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தில் ஈடுபடுத்திக் கொண்டதில்லை.
அனைவருமே தயாரிப்பாளர்களைத் தங்கள் முதலாளிகளாகத்தான் பார்த்தார்கள்.இன்று நிலைமை மாறியிருக்கிறது.
ஒரு அமைப்பில் இருந்து கொண்டு இன்னொரு அமைப்பில் இடையூறு செய்வதை ,தலையிடுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது நடிகர் சங்கத் தேர்தல் அல்ல. இது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் .
தயாரிப்பாளர்களின் 1612 வாக்குகளில் சுமார் 80 முதல் 90 விழுக்காடு சிறுபடத் தயாரிப்பாளர்களின் வாக்குகள்தான். சிறுபடத் தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படமெடுப்பவர்கள் . இன்று தேர்தலுக்கு வந்துள்ள நடிகர் சங்கத்தினர், என்றாவது இந்த 80 முதல் 90 விழுக்காடு உள்ள சிறுபடத் தயாரிப்பாளர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.
சிறுபடத் தயாரிப்பாளர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். அது தேர்தல் நாளில் வெளிச்சத்துக்கு வரும் . சங்கத்தில் அதிகார தோரணை மாறவேண்டும் அகந்தைமாறவேண்டும் என்றுதான் சகோதரர்கள் ரித்திஷ் சேரன், ஸ்ரீகாந்த் போன்றவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் .கடந்த 2 ஆண்டுகளாக சங்கம் சிறு தயாரிப்பாளர்களை சிறிதும் மதிக்காத சங்கமாக இருந்தது. தயாரிப்பாளர்களின் குறைகளை பிரச்சினைகளை அரசிடம் எடுத்துக் கொண்டு செல்லவே இல்லை. ” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment