மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் ரிலீஸ் பற்றிய குழப்பம் நீடிக்கிறது!

மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்குத் தடை இருக்கிறது என்றும், தடையில்லை குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
தடையா..? தடையில்லையா..?  என புரியாத குழப்பமான இன்றைய சூழ்நிலையில் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்பதால் படத்துக்குத் தடை விதிக்கக்கோரி பிரபல பைனான்சியர் போத்ரா வழக்கு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த்தாலும், படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதாலும் பல முறை தேதி குறிப்பிட்டும் இந்தப் படம் ரிலீஸாகாமலேயே இருந்து வந்த்து.
இந்த நிலையில் திடீரென்று நேற்றைய முன்தினம் மொட்டை சிவா கெட்ட சிவா படத்தின் மீதான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று திடீரென  செய்தி வெளியானது. இதையடுத்து உடனுக்குடன் அந்தப் படம் மார்ச் 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். பின்பு அடுத்த நாள் படம் மார்ச் 10-ம் தேதி வெளியாகும் என்று பத்திரிகைகளில் விளம்பரமெல்லாம் கொடுத்தார்கள்.
இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் இந்தப் படத்திற்கெதிராக உள்ள வழக்கின் உண்மை நிலை பற்றியும் தான் ஏன் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்பது பற்றியும் தெரிவிக்க பைனான்சியர் போத்ரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 
 
அப்போது அவர் பேசும்போது ”இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தின் தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ்  மதன்தான். அவர் எவ்வளவு பெரிய குற்றவாளி என்பது நம் அனைவருக்குமே தெரியும். 105 மாணவர்களின் பணத்தை மோசடி செய்தவர். அந்தப் பணத்தை  இன்னமும் யாருக்கும் கொடுக்கவில்லை. தலைமறைவாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு போலீசையே அலையவிட்டவர். அப்படிப்பட்ட மதன் தயாரித்துள்ள படம்தான் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.
 
அந்தப் படத்துக்குத்தான் நான் ஏழரை கோடி ரூபாய் பணம் கடனாக கொடுத்தேன். அது தரப்படவில்லை. அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பைனான்சியரின் பாக்கி தீர்க்கப்படாமல் படத்தை வெளியிட முடியாது. எனவேதான் படத்துக்கு நீதிமன்றம் தடையாணை வழங்கியது. அந்தத் தடை இந்த நேரம்வரை விலக்கப்படவோ ரத்து செய்யப்படவோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. மார்ச் 10- ல் படம்  வெளியாகும் என்று விளம்பரங்களும் வருகின்றன.  இது எவ்வளவு மோசடியானது..?
 
இந்தப் படத்துக்கான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. மாண்புமிகு  நீதிபதிகள் கல்யாணசுந்தரம், விமலா ஆகியோர் விசாரித்துள்ளனர். இந்நிலையில் நீதிபதி ஒருவரின்  மகன்  சினிமாவில் பாடல் எழுதுகிறார். அவரை வைத்து தாங்கள் தடையை ரத்து செய்து விட்டோம் என்று தவறாக செய்தி பரப்பி வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பொய்…?
 
நீதிபதி  என்பவர்  யார் சொல்வதையும் கேட்பவரல்ல. கடவுளே வந்தாலும் அவரை மாற்ற முடியாது. நான் நீதிபதியையும், நீதிமன்றத்தையும் முழுதாக நம்புகிறேன். மீண்டும் சொல்கிறேன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா ‘படத்துக்கு தடை நீக்கப்படவில்லை. 
 
விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் யாரும்  இதை எல்லாம் நம்ப வேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது படம் வெளியாகிறது என்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அப்படி விளம்பரம் செய்யும் ஆர்.பி.செளத்ரி, டாக்டர் செல்வம் மீது இது பற்றி புகார் கொடுக்கப் போகிறேன்…” என்றார்.
 
இவருடைய கூற்றுப்படி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் இல்லையெனில் படம் எப்படி வரும் மார்ச் 10-ம் தேதி ரிலீஸாகும் என்று தெரியவில்லை..!
 
தயாரிப்பாளர் தரப்பினர் இது குறித்து விளக்கமளிப்பார்கள் என்று திரையுலகத்தினர் எதிர்பார்க்கின்றனர்..!

Comments