10 மணி நேரத்தில் திரைப்படம் - சாதனை நாயகனாகும் டாக்டர்.சரவணன்!!!

மதுரையில் பிரபல டாக்டராக உள்ள சரவணன், ‘அகிலன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
 
அதன் பிறகு தனது டாக்டர் தொழி, சொந்த மருத்துவமனை இதனுடன் அரசியல் என்று பிஸியான இவரிடம் பல இயக்குநர்கள் தொடர்ந்து கதை சொல்லி வந்தாலும், பிறகு பார்க்கலாம் என்று நிராகரித்து வந்தவர், தற்போது
சாதனை படம் ஒன்றுக்காக மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

10 மணி நேரத்தில் முழு படத்தையும் முடிப்பதுதான் சாதனை. இத்தகைய உலக சாதனை முயற்சிப் படமான ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற இந்த படத்தில் நாயகனாக நடிப்பதன் மூலம் சாதனை நாயகனாக உள்ள டாக்டர்.சரவணன், வரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று சென்னையில் நடைபெற்ற ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படத்தின் படப்பிடிப்போது படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தனர். டாக்டர்.சரவணன், இயக்குநர் எம்.எஸ்.செல்வா, தயாரிப்பாளர் ஜி.அழகர், நடிகர் சிங்கம் புலி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இதில் பங்கேற்றார்கள்.
 
சாதனைப் படம் குறித்து பேசிய சரவணன், “அகிலன் படத்தின் மூலம் ஹீரோவாக நடித்த நான், பிறகு மருத்துத் துறை, அரசியல் என்று பிஸியானதால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லை. அப்படி இருந்தும் பலர் என்னிடம் கதை சொல்லி நடிக்க சொல்வார்கள், ஆனால் நான் தவிர்த்து வந்தேன். அப்படி தான் இயக்குநர் செல்வாவும் என்னிடம் கதை சொல்ல, நான் தவிர்த்து வந்தேன். ஒரு கட்டத்தில், புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக பத்து மணி நேரத்தில் ஒரு படத்தை எடுக்கப் போகிறேன், என்று கூறி அதற்கான கதையை என்னிடம் சொன்னார்.
 
10 மணி நேரத்தில், ஒரே இடத்தில் ஒரு படம் என்பது வியப்பாக இருந்தது. இதற்கு முன்பாக 11 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்தது தான் சாதனையாக உள்ளது. தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு திகில் கலந்த காமெடிப் படமாக உருவாகி வரும் இப்படம் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு படமாகவும், அதே சமயம் வித்தியாசமான முயற்சியாகவும் உருவாகி வருகிறது” என்றார்.
 
இயக்குநர் எம்.எஸ்.செல்வா பேசுகையில், “தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டுக்கு ஏற்ற படமாக இப்படத்தை உருவாக்கினாலும், அதில் ஏதாவது ஒரு புதுமையை செய்ய வேண்டும், அப்படி செய்தால் தான் ரசிகர்களிடமும், ஊடகத்தினரிடமும் பாராட்டுப் பெற முடியும். அதற்காக தான் பத்து மணி நேரத்தில் இப்படத்தை முடித்து சாதனை நிகழ்த்த முடிவு செய்தோம். இதற்காக நடிகர்கள் எனக்கு பெரும் உத்தழைப்பு கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே படத்தின் நடிகர் நடிகைகளை வைத்து பல முறை ஒத்திகை பார்த்துவிட்டு தான் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறோம்” என்றார்.
 
நடிகர் சிங்கம் புலி பேசுகையில், “இயக்குநர் இந்த படத்தின் கதையை சொல்லி என்னை நடிக்க சொன்னார். மேலும், 10 மணி நேரத்தில் முழு படத்தையும் முடிக்க போவதாக சொன்னார். முதலில் நமக்கு சரிபடுமா, தேதி ஒத்துவருமா என்று தவிர்த்து வந்தேன். பிறகு இதில் டாக்டர்.சரவணன் ஹீரோவாக நடிக்கிறார் என்று தெரிந்ததுமே, நான் நடிக்க சம்மதித்து விட்டேன். காரணம், மதுரையில் மருத்துவமனை வைத்து அவர் பலருக்கு இலவச சிகிச்சை அளித்து வருவதோடு, பல்வேறு நல்ல காரியங்களையும் செய்து வருகிறார். அப்படிப்பட்டவரின் படத்தில் நடிக்காமல் போனால் எப்படி என்பதால் தான் உடனே சம்மதித்தேன்.
 
அதன்படி, நல்ல திட்டத்தின் மூலம் இந்த படத்தை தற்போது தொடங்கியுள்ளோம். ரொம்ப நகைச்சுவை கலந்த ஒரு திகில் படம். படப்பிடிப்பின் போதே, படம் எப்படி வரும் என்பது தெரியும். இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்பது இப்போதே தெரிகிறது” என்றார்.
 
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரே வீட்டில் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து இந்த தகவல்களை லிம்கா சாதனை குழுவினரிடம் படக்குழுவினர் சர்ப்பிக்க உள்ளனர்.
 
இதில், டாக்டர்.சரவணனுக்கு ஜோடியாக அனுகிருஷ்ணன் நடிக்க, இவர்களுடன் சிங்கம்புலி, குமரேசன், இயக்குநர் எம்.எஸ்.செல்வா, கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
 
ஜெயக்குமார் தங்கவேலு ஓளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜா இசையமைக்க, இயக்குநர் எம்.எஸ்.செல்வா மூன்று பாடல்கள் எழுதியுள்ளார். மது நடனம் அமைக்க, பழனி ஒப்பனைத் துறை கவனித்துள்ளார். எம்.எஸ்.செல்வா, ஜி.அழகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வி.கே.சுந்தர் மக்கள் தொடர்பை கவனிக்கிறார்.

Comments