உலகில் அதிக வருமானம் பெறும் நடிகைகளில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றவர் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன். ஆனால் இவரது பெயர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழைகள் பயன்படுத்தும் ரேஷன்கார்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும். இவரது பெயர் மட்டுமல்ல முன்னணி இந்தி நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராணி முகர்ஜி ஆகியோரின் பெயர்களிலும் ரேஷன் கார்டு உள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள கயாம்கஞ்ச் தாலுகா சஹாப்கஞ்ச் கிராமத்தில் உள்ள ரேஷன் கார்டு பயனாளிகள் பட்டியலில் தான் இவர்களது பெயர்கள் உள்ளது. அதுமட்டுமல்ல இவர்கள் மானிய விலையில் மாதந்தோறும் ரேஷன் பொருட்களையும் வாங்கி வருவதாக ஆவணங்களில் உள்ளது. ஆவணங்களில் அந்த நடிகைகளின் கணவர் பெயர்களும் கற்பனையாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனை அறிந்த கிராமத்தினர் இதுகுறித்து ரேஷன் கார்டுகளை வழங்கிய அதிகாரி மீது புகார் அனுப்பினர். இதன்மூலம் இந்த தகவல் வெளி உலகுக்கு தெரியவந்தது. மாவட்ட கலெக்டர், இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரியை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கயாம்கஞ்ச் உதவி கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கும் அந்தியோதயா திட்டத்தின்கீழ் 4 பேர் பெயரிலும் ரேஷன் கார்டு வழங்கி உள்ளனர். அவர்களது ஆண்டு வருமானம் ரூ.18 ஆயிரம் என்று பதிவாகி உள்ளது. ஏழைகள் பயன்படுத்தும் இந்த ரேஷன் கார்டுகளை இதுபோன்ற கற்பனையான பெயரில் வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்த பிரச்சினையை வெளியே கொண்டு வந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment