Sunday, December 13, 2015
Chennai:சொல்லி அடித்தது போல கமர்ஷியல் ‘கில்லி’ யாக வெளியாகியிருக்கும் படம் தான் ‘ஈட்டி’.
தடகள வீரரான அதர்வாவுக்கு சிறு வயதில் இருந்தே உடலில் ஒரு குறைபாடு
இருக்கிறது. அதன்படி, சிறு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தாலே அதர்வா மயக்கம்
அடைந்து விடுவார். அதே காயம் உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் ஏற்பட்டால்
ரத்தப் போக்கு நிற்காமல் உயிரிழக்கும் நிலையும் ஏற்படும்.
லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் இதுபோன்ற ஒரு குறைபாடு உள்ள அதர்வா
தேசிய அளவில் தடகள போட்டியில் தங்கம் வெல்வது மட்டும் இன்றி,
தேசத்துக்காகவும் தங்கம் வெள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், ராங் கால் மூலம் நாயகி ஸ்ரீ திவ்யாவுடன் அதர்வாவுக்கு
காதல் ஏற்படுகிறது. தஞ்சாவூரில் வசிக்கும் அதர்வாவும், சென்னையில்
வசிக்கும் ஸ்ரீதிவ்யாவும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலே செல் போன்
மூலம் தங்களது காதலை வளர்த்து வருகிறார்கள்.
தேசிய தடகளப் போட்டிக்காக சென்னைக்கு வரும் அதர்வா, அப்படியே நம்ம
செல்போன் செல்லத்தையும் பார்த்துவிடலாம் என்ற கனவோடு சென்னைக்கு வர, அங்கு,
கள்ள நோட்டு ரவுடி கும்பலுடன் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
ஸ்ரீதிவ்யாவின் குடும்பம் சம்மந்தமான பிரச்சினை என்று தெரியாமல் அந்த
பிரச்சினையில் அதர்வா சிக்கிக்கொள்ள, அவருக்கு ரவுண்ட் கட்டுகிறது ரவுடி
கும்பல்.
தடகள போட்டியில் தங்கம், உடலில் பிரச்சினை இந்த நிலையில் ரவுடிகளின்
கத்திகளுடன் மோதும் அதர்வா, எப்படி இவற்றில் இருந்து மீண்டு தனது கனவை
நினவாக்குகிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்.
பாலா பட்டறையில் சானைப் பிடிக்கப்பட்ட அதர்வா இந்த படத்தில் முழு
கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருகிறார். ஹீரோக்கள் சிக்ஸ்பேக் வைத்தால், அந்த
படம் பிளாப் என்ற விதியை மாற்றிக்காட்டும் அளவுக்கு பல காட்சிகளில் தனது
சிக்ஸ்பேக்கை காட்டி மிரட்டுகிறார். காதல் காட்சிகளில் முன்னேற்றம்
அடைந்திருக்கும் அதர்வா, ஆக்ஷன் காட்சிகளில் டிகிரி முடித்து விட்டார்
என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், அந்த முகத்தில் இன்னும் அந்த
சிறுபிள்ளை தனம் மட்டும் லேசாக தெரிகிறது.
பக்கத்து வீட்டு பெண்ணான ஸ்ரீதிவ்யா, முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு
பிரகாசத்துடன் இருக்கிறார். திரைக்கதையுடன் நாயகி பயணித்தாலும்,
பெரும்பாலான காட்சிகளில் பின்னுக்கே தள்ளப்பட்டுள்ளார்.
ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்களது வேலையை
சரியாக செய்துள்ளார்கள். ஸ்ரீதிவ்யாவின் அண்ணனாக வரும் செல்வா,
அழகம்பெருமாள் ஆகியோரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதி படத்திற்கு தூணாக நின்றுள்ளது. பின்னணி
இசையில் கவனம் செலுத்தியுள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்களை ரொம்ப
சாதரணமாகவே கொடுத்துள்ளார்.
கதை முக்கியமல்ல, திரைக்கதையும் காட்சிகளும் தான் முக்கியம் என்ற
எண்ணத்தில் படம் எடுக்கும் இயக்குநர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை
நிரூபித்த இயக்குநர்களின் பட்டியலில் இப்படத்தின் இயக்குநர் ரவிஅரசுக்கும்
இடம் உண்டு.
ரெகுலரான கமர்ஷியல் படத்தில் வரும் ரெகுலர் காட்சிகளைக் கூட, சற்று
வித்தியாசப்படுத்தி காண்பித்து ரசிகர்களை சோர்வடையாமல் பார்த்துக்கொள்வதில்
இயக்குநர் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார். வசனங்கள் ஈட்டியைப் போல
ரொம்பவே கூர்மையாக இருக்கிறது. குறிப்பாக “திறமை என்பது பயிற்சிதான்” என்ற
வசனம். இப்படி பல இடங்களில் வசனங்கள் ரசிகர்களிடம் அப்ளாஸ் பெருகிறது.
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து வெளியான எந்த படமும்
தோல்வியை சந்தித்ததில்லை, அந்த பட்டியலில் இப்படத்திற்கும் இடம் உண்டு.
Comments
Post a Comment