வாய்ப்பு கிடைத்தால் விஜய், அஜீத் படங்களை தயாரிப்பேன்: தனுஷின் ட்விட்டர் பேட்டி!!!

24th of October 2015
சென்னை:நடிகர் தனுஷ், நேற்று மாலை ‘டிவிட்டரில்’ ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
 
அப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தல அஜித், விக்ரம், நயன்தாரா, சமந்தா ஆகியோரைப் பற்றி தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டார்.

விஜய், அஜித் இருவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அவர்களை பின்பற்றவும் செய்கிறேன். இருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் யார் ரசிகன் என்று என்னை கேட்டால், நான் ரஜினி ரசிகன் என்றுதான் சொல்வேன்.
சூர்யா கடின உழைப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகராக இருக்கிறார். மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
 
தமிழ் படவுலகில் எனக்கு பிடித்த ‘டான்சர்’ விஜய். அவருடைய படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நடிப்பேன். 
 
அஜித் கம்பீரமானவர். விஜய், அஜித் படங்களை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால், அதை பெரிய மரியாதையாக கருதுவேன்.
 
விக்ரமை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர், கடினமாக உழைக்கிறார். நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். மிக எளிமையானவர். இனிமையானவராகவும் இருக்கிறார். 
 
சமந்தா திறமையான நடிகை. அவருடன் இணைந்து நடித்து இருக்கிறேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. நயன்தாரா எல்லோராலும் விரும்பப்படும் நடிகையாக இருக்கிறார். அவரைப் பற்றி வேறு என்ன சொல்வதற்கு இருக்கிறது?
எனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன். அது கூடிய சீக்கிரம் நடக்கவுள்ளது. 
 
வில்லன் கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்சனின் வில்லத்தனமான நடிப்பை ரசிப்பேன். நான் நடித்த மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் இப்போது பேச்சு வார்த்தை நடக்கிறது. 
 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களின் தலைப்புகளை என் படங்களுக்கு தொடர்ந்து வைப்பது தானாகவே அமைந்ததுதான். நான் அந்த பெயர்களை தேடிப் போகவில்லை. 
 
பள்ளி, கல்லூரி காலங்களில் எனக்கு பிடித்த நடிகைகள் குஷ்பு, சிம்ரன். எனக்கு பிடித்த விஜய் படம் ‘கில்லி’, பிடித்த அஜித் படம் ‘தீனா’. என்றார் தனுஷ்.

Comments