20th of September 2015
சென்னை:நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதாக பொறாமைப்படுவதை நடிகைகள் கைவிட
வேண்டும். மக்களை அதிகமாக தியேட்டருக்கு வரவழைக்கும் தகுதி யாருக்கு
உள்ளதோ, அவர்களுக்கு அதிக சம்பளம் தருவதில் என்ன தவறு உள்ளது,'' என,
பாலிவுட் நடிகர், சல்மான் கான் ஆவேசமாக பேசியுள்ளார்.
பாலிவுட்டில்,
நடிகர்களுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாகவும், தங்களுக்கு, மிகக்
குறைந்த சம்பளமே தரப்படுவதாகவும், கங்கனா ரனாவத், வித்யா பாலன் போன்ற
நடிகைகள் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தனர். சம்பள விஷயத்தில்,
நடிகர் - நடிகைகளுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறியிருந்தனர்.
இதுகுறித்து, பாலிவுட்டில் மிக அதிகமாக, 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும்,
நடிகர் சல்மான் கானிடம் கேட்கப்பட்ட போது, ஆவேசமாக அவர் அளித்த
பேட்டி:நடிகர் - நடிகைகளுக்கான சம்பளம், அவர்களால் முடிவு செய்யப்படுவது
இல்லை. தயாரிப்பாளர், வினியோகஸ்தர் ஆகியோர் தான் முடிவு செய்கின்றனர்.
தியேட்டருக்கு அதிக கூட்டத்தை யாரால் வரவழைக்க முடியுமோ, அவர்களுக்குத்
தான், சம்பளம் அதிகம் கொடுக்கப்படுகிறது.
படத்தை எடுக்கும்
தயாரிப்பாளர், தனக்கு வரும் லாபத்தின் அடிப்படையில் தான், நடிகர் -
நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பார். குறிப்பிட்ட நடிகர்களால், தியேட்டருக்கு
அதிக கூட்டம் வரும் என, தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர். அதனால், என்னை
போன்ற நடிகர்களுக்கு அதிக சம்பளம் தருகின்றனர்; இதில் என்ன தவறு?
நடிகைகளால்,
அதிக கூட்டத்தை தியேட்டருக்கு வரவழைக்க முடிந்தால், அவர்களுக்கு அதிக
சம்பளம் கிடைக்கும். எத்தனை நடிகர்கள், நடிகைகளை விட மிகக் குறைவாக சம்பளம்
பெறுகின்றனர் என்பது தெரியுமா?
இவ்வாறு சல்மான் கான் கூறினார்.
சல்மான் கானின் இந்த பேட்டியால், பாலிவுட்டில், நடிகர்களுக்கும்,
நடிகைகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சல்மான் கானுக்கு, விரைவிலேயே
நடிகைகளிடமிருந்து பதிலடி கிடைக்கும் என, கூறப்படுகிறது.
Comments
Post a Comment