ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு” – ‘தற்காப்பு’ விழாவில் பி.வாசு விளக்கம்!!!

17th of September 2015
சென்னை:இயக்குனர் பி.வாசுவின் மகனான சக்திவேல் வாசு (நம்ம சக்தி தான்) கிட்டத்தட்ட ரீ என்ட்ரி என்கிற லெவலில் நீண்டநாட்கள் கழித்து நடித்துள்ள படம் தான் ‘தற்காப்பு’. போலீஸ் பற்றிய ஒரு மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை ஆர்.பி.ரவி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, கார்த்தி இருவரும் இசைத்தகட்டை வெளியிட்டு பெற்றுக்கொண்டனர். இவர்களுடன் இயக்குனர்கள் மிஷ்கின், எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரகனி, பி.வாசு உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசும்போது ஒரு தந்தையாக இயக்குனர் பி.வாசுவின் ஆதங்கம் நன்றாகவே வெளிப்பட்டது.

ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இரு வாழ்க்கை இருக்கும் என்பார்கள். ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்று நமது வாழ்க்கை. இன்னொன்று பிள்ளைகளால் வரும் வாழ்க்கை. மகன் ஆளாகும்வரை அப்பாக்கள் படும் கஷ்டம் எல்லாருக்கும் புரியாது. எங்கப்பா என்னை ஆளாக்கப்பட்ட பாடு இப்போது ஒரு தகப்பனாக எனக்குப் புரிகிறது.

எல்லா இயக்குநரும் என்னிடம் கதை சொல்ல வேண்டுமே என்று சக்தியிடம் கதை சொல்ல தயங்குகிறார்கள். ஆனால் நான் சக்திக்காக கதை கேட்பதில்லை. சக்தி கேட்கச்சொன்னால் மட்டும்தான் கேட்பேன். சக்தியைப் பொறுத்தவரை அவனை நான் பாராட்டவில்லை என்று தன் அம்மாவிடம் குறைபடுவானாம். இந்தப்படம் ‘தற்காப்பு’ திருப்தியாக வந்து இருக்கிறது. எனக்கு பிடித்துள்ளது. இனி சக்திக்கு நல்ல நேரம் வரும். இனி மற்றவர்கள் அவனைப் பாராட்டுவார்கள்” என்றார் பி.வாசு நெகிழ்ச்சியுடன்..

Comments