சூடு பிடிக்கும் - நடிகர் சங்க தேர்தல்: கார்த்தி, சிம்பு, குஷ்பு முக்கிய பதவிகளுக்கு போட்டி`!!!

13th of September 2015
சென்னை:நடிகர் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் களத்தில் இருப்பதால் பரபரப்பாக உள்ளது. நடிகர் சங்க தேர்தலில் 2 அணிகள் மோதுகின்றன. கார்த்தி, சிம்பு, குஷ்பு ஆகிய மூன்று பேரும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள். ஆதரவு திரட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.

நடிகர் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்நிலையில் வரும் 18ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரண்டு அணிகள் களத்தில் உள்ளதால் தேர்தல் சூடு பிடித்துள்ளது.

கடந்த 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலின்போது சரத்குமார் போட்டியின்றி சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ராதாரவி பொதுச் செயலாளராக இருந்தார்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளவர்களாக 3,139 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அதிகம்பேர் இசை நாடக நடிகர்கள். இவர்கள் மேடையில் பாட்டுப்பாடி நடிக்ககூடியவர்கள். மதுரை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். கரூர், காரைக்குடி, திண்டுக்கல் பகுதிகளிலும் நாடக நடிகர்கள் பரவலாக காணப்படுகின்றனர்.

சினிமா நடிகர்களைவிட, நாடக நடிகர்கள்தான் வெற்றி–தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். எனவேதான், தேர்தலில் போட்டியிடுபவர்கள் இவர்களை குறிவைக்கிறார்கள்.
ஏற்கனவே இரு அணியினரும் பல மாவட்டங்களில் சுற்றுப்பயண
ம் செய்து நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இரண்டாவது கட்டமாக மீண்டும் இந்தப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இன்னொரு புறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடக்கிறது. சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு சிம்பு நிறுத்தப்படுவார் என்று பேச்சு அடிபடுகிறது. இந்த பதவியில் முன்பு வாகை சந்திரசேகர் இருந்தார்.
இவர்கள் அணியில் இரண்டு துணைத்தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மற்றும் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தியாகு, குண்டு கல்யாணம், குயிலி, நளினி, ஜெயமணி ஆகியோரும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளராக விஷால் நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு பொன்வன்ணன், அல்லது கருணாஸ் நிறுத்தப்படுவார் என தெரிகிறது.
கார்த்தி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர்கள் அணி சார்பில் நடிகை குஷ்புவையும் முக்கிய பதவிக்கு போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

Comments