ஹாலிவுட் இயக்குனரை மிரளவைத்த நயன்தாரா!!!

27th of September 2015
சென்னை:நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'மாயா' மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திகில் படமான இப்படத்தில் நயன்தாரா குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார்.

இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் இயக்குனர் எரிக் இங்கிலாந்து மாயா படத்தை பார்த்து மிரண்டு போனாராம். படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் இயக்குனரை வெகுவாக அவர் பாராட்டியுள்ளார்.
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டைப் பெற்ற மாயா படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கிடையில், இப்படத்தின் வெற்றி குறித்து இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின்இயக்குநர் அஷ்வின் சரவணன் , நடிகர்கள் ஆரி , அம்ஜத் கான் , ஒளிப்பதிவாளர் சத்யா , படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
முதலாவதாக பேசிய நடிகர் ஆரி , மாயா படத்தின் வெற்றி எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த முழுமையான  வெற்றியை சுவைக்க தான் நான் வெகுநாட்களாக காத்துக்கொண்டு இருந்தேன். நான் மாயா படத்தில் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் எல்லோரும் வந்து என்னிடம் ஏன் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறீர்கள் என்று என்னிடம் வருத்தமாக கேட்டனர். அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மாயாவின் வெற்றி பதில் சொல்லி உள்ளது. படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி. 
நேற்று தெலுங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்னை பார்த்த ஒருவர் நான் யார்என்பதை கண்டறிய முடியாமல் என்னை பார்த்து கொண்டே இருந்தார் பின்னர் சுதாரித்த அவர் , “நீங்கள் மயூரி படத்தின் நாயகன் தானே” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு, என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டு சென்றார். ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்த் மாயா படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பேசியுள்ளது எங்களுக்கு மிக பெரிய பூஸ்ட் அப்பாக அமைந்துள்ளது, என்றார். 
நடிகர் அம்ஜத் அவர்கள் படத்தை பற்றி பேசும்  போது, படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன் என்னுடைய நெருங்கிய நண்பர். இந்த படத்தின் கதையை கேட்டவுடன் நான் இந்த படத்தில் நிச்சயம் எதாவது ஒரு சின்ன  வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். அஷ்வின் சரவணன் இந்த படத்துக்கு என்னை ஆடிஷன் செய்து தான் எடுத்து கொண்டார். நான் நண்பனாக இருந்த போதும் என்னை ஆடிஷன் செய்து தான் எடுத்து கொண்டார், அந்த அளவுக்கு அவர் படம் நன்றாக வரவேண்டும் என்று சுயநலத்தோடு உழைத்தார் என்றார் அம்ஜத். 
படத்தின் தெலுங்கு விநியோஸ்தகர் கல்யான் பேசும் போது , நான் மாயா படத்தை முதல்முறை பார்த்தவுடன் இந்த படத்தை நான் தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மாயா திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் தெலுங்கில் ஐந்தரை கோடியை வசூலித்துள்ளது. இது மிக பெரிய சாதனையாகும், என்றார்.
படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின் சரவணன் கூறும் போது , மாயா படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் என்னை கண்மூடித்தனமாக நம்பி இந்த படத்தை தயாரித்துள்ளார். மாயா படத்தை எடுக்கும் போது படத்தின் முடிவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறி தான் முடித்தேன். இப்போது எனக்கு இரண்டாம் பாகத்தை இவ்வாறு எடுக்கலாம் அவ்வாறு எடுக்கலாம் என்று புதுப்புது கதைகளை என்னை சந்திக்கும் பலர் கூறி வருகிறார்கள். அவர்கள் என்னிடம் இப்படி கதைகளை சொல்லும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் மாயா படத்தின் பாகம் இரண்டை எடுப்பேன் என்றார் இயக்குநர்.
இறுதியாக பேசிய  தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவர்கள் மாயாவின் வெற்றி எனக்கு மிகபெரிய மகிழ்ச்சியையும், மன பலத்தையும் தந்துள்ளது. படத்தில் நயன்தாரா நடித்திருக்காவிட்டால் படம் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை, என்று தெரிவித்தார்.

Comments