ஆர்யா ஒன்றும் காதல் மன்னன் இல்லை: விஷ்ணுவர்தன்!



2nd of August 2015
சென்னை:ஆரம்பம்’ அஜித்துக்குப் பிறகு, விஷ்ணுவர்தன் எடுத்துக்கொண்டது ‘யட்சன்’. இந்தத் தடவை அருமை நண்பன் ஆர்யா, அன்புத்தம்பி கிருஷ்ணாவோடு கூட்டணி. ஏவி.எம் ஸ்டூடியோவில் கொஞ்சம் காபி... நிறையப் பேச்சு... ஓவர் டு விஷ்ணுவர்தன்.

 யட்சன்’ என்பது சுத்தமான தமிழ் வார்த்தை. ‘இயக்குபவன்’ என்பது பொருள். ஒரு வார இதழில் வெளியான கதை. சுபா எழுதிட்டு இருக்கும்போதே, ‘கதையில் டைரக்டர் விஷ்ணுவர்தன் வர்ற மாதிரி ஒரு இடம். உங்க பெயரைப் பயன்படுத்திக்க அனுமதி வேணும்’னு கேட்டார். ‘சரி’ன்னு சொல்லிட்டு கதையைப் படித்தும் பார்த்தேன். நல்லாயிருந்தது. நல்ல துவக்கம், ஓட்டமும் சுவாரஸ்யமான முடிவும் இருந்தது.

ஆக்‌ஷன் காமெடியாகவும் செய்ய வழியிருந்தது. இத்தனைக்கும் சுபா ‘ஆரம்பம்’ டிஸ்கஷன்போது சின்னப் பொறியாய் சொன்ன கதைதான். அதுவும் மனதில் பதிந்துவிட்டது. இரண்டு ஹீரோக்கள் தேவைப்படுவாங்க. ஒண்ணு ஆர்யா. இன்னொண்ணு... எப்பவும் என்னை சான்ஸ் கேட்டுட்டு இருக்கிற குரல். ‘என்னை வச்சு படம் எடுக்க மாட்டியா அண்ணா’ எனக் கேட்கிற தம்பி கிருஷ்ணாவின் குரல்தான் அது. இரண்டு பேரையுமே அலைபேசியில் பிடிச்சேன்.’’‘‘உங்க நண்பராச்சே ஆர்யா...’’

எங்களுக்குள்ளே எந்த ஒளிவுமறைவும் இல்லை. ‘டேய், மச்சான்... அருமையா ஒரு கதை மாட்டுச்சுடா. நீ இருக்கே அதில... உடனே வந்து சேருடா டார்லிங்’னு கூப்பிட்டேன். எங்கேயிருந்தோ ஸ்பாட்டுக்கு வந்துட்டான். அப்படியே டீயை உறிஞ்சுக்கிட்டு கதையைக் கேட்டதும் ‘தேதிகளை சொல்லு... அட்ஜெஸ்ட் பண்ணிடுறேன்’னு சொல்லிட்டு பறந்துட்டான். அதுதான் ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் வருவான் பாருங்க...

அந்தக் கலர், ஸ்டைல் இப்போ அவனுக்கு மிஸ் ஆகிடுச்சு. அவனை கோட் - சூட் மாட்டி, டை கட்டி இங்கிலீஷ் பேசுற பையனா - அதுவும் சாக்லெட் பாய், காதல் மன்னன்னு பட்டம் கட்டியெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால், உணமையில் ஆர்யா பக்கா லோக்கல் ஆளு. கொஞ்சம் அழுக்கு மூட்டையா இருந்தால்தான் அழகா இருப்பான். எக்குத்தப்பா பேசுகிற கெத்தில் அவனை திரையில் மிஞ்சுறது கஷ்டம். அதனால் ‘அறிந்தும் அறியாம’லும் ஆர்யாவைத் திரும்பக் கொண்டு வந்தேன். காணாமல் போன குழந்தை திரும்பக் கிடைச்ச மாதிரி கெடைச்சான். டாப் டு பாட்டம் எல்லோருக்கும் பிடிக்கிற ஆர்யா இதுல இருக்கான்!’’
‘‘எப்படியிருக்கும் ‘யட்சன்’?’’

‘‘இரண்டு பசங்களோட வாழ்க்கை. அவன் வாழ வேண்டிய வாழ்க்கை இவனுக்கும், இவன் வாழ வேண்டிய வாழ்க்கை அவனுக்கும் மாறிப்போனால் எப்படியிருக்கும். படு ரகளையா வந்திருக்கு. இப்படி நடந்ததற்கான காரணம் என்ன? நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு படம் போய்க்கிட்டே இருக்கும். இந்தப் படத்தில் எனக்குப் பிடிச்சது ஆரம்பிச்ச வேகத்தில படம் சரசரன்னு போறது. டீ போடுகிற நேரத்திலே எஸ்டேட்டையே காலி பண்ற மாதிரி எமகாதகனுங்க இவனுங்க. இழையோட்டமா, திணிச்ச மாதிரி இல்லாம தூவின மாதிரி நகைச்சுவை இருக்கிறதும் படத்திற்கு நல்ல அம்சமா இருக்கு.

ஆர்யாவோட ஸ்பெஷல் என்னன்னா, என்கிட்ட ரொம்ப சென்ஸிபிள். சரியில்லைன்னா நீங்க எழுத முடியாத வார்த்தைகள்ல திட்டிக்குவோம். நல்லா பண்ணிட்டா, கட்டிப் புடிச்சு கொஞ்சித் தீர்த்திடுவோம். அவனை வச்சு ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். ‘நான் கடவுளி’ல் அவனை பார்த்தீங்கன்னா தெரியும். நான் ஃபீல் பண்றதை அவன் பெட்டரா வெளிக்கொண்டு வருவான். ‘அறிந்தும் அறியாமலும்’ பார்த்தீங்கன்னா, சும்மா வெடவெடன்னு திரிகிற ஒரு ஆளு. அடிக்கிறது, உதைக்கிறதைத் தவிர சட்டம், கோர்ட், அரசாங்கம்னு வேற எதுவுமே தெரியாத பையன். அதுக்கு ஆர்யா சரியா இருந்த மாதிரி இதிலும் ஆர்யா இருக்கான்!’’
‘‘சொந்தத் தம்பியை காதல் காட்சிகளில் ஹேண்டில் பண்றது கஷ்டம் இல்லையா?’’

‘‘தம்பிங்கிற பாசமெல்லாம் சினிமாவில் செல்லாது. ‘கட் சொன்ன பின்னாடியும், ஸ்வாதிகிட்டே என்னடா கொஞ்சிக்கிட்டே இருக்கே?’ன்னு திட்டுவேன். ஸ்பாட்டுக்கு வந்திட்டா நான் வேற ஆளு. அவன் இதுவரைக்கும் நடிச்சதெல்லாம் பெரும்பாலும் புதுமுக டைரக்டர்கள்கிட்ட. அவன் கொஞ்சம் அசால்ட்டா இருப்பான். நம்மகிட்டே அந்த பாச்சா பலிக்காது.

அவனுக்கே இது முக்கியமான ரோல். தம்பிங்கறதுக்காக சொல்லலை, அழகா பண்ணியிருக்கான். வெளியில அண்ணன்னு பயந்ததை விட அதிகமா ஷூட்டிங் ஸ்பாட்டில் பயந்துக்கிட்டே இருந்தான். திட்டினா ஒண்ணும் சொல்ல முடியாது. சேர்த்து வச்சு திட்டுவேன். நானே எல்லோருக்கும் நடிச்சுக் காட்டுவேன். அதை அப்படியே பண்ணினால் போதும். ‘நல்லா நடிக்கிறே, அதான் உன்கிட்ட கொஞ்சம் திமிரு இருக்கு’ன்னு பிரகாஷ்ராஜ் சொல்வார்!’’

‘‘உங்களுக்கு எப்பவும் யுவன் ஷங்கர்தான்..!’’‘‘நண்பன்தான். எனக்கு நல்லதா, விருப்பமானதா தருவான். அருமையா உழைச்சு போட்டிருக்கான். எனக்கு ‘யுவனின்றி ஒரு அணுவும் அசையாது’. ஜிலுஜிலுன்னு கேட்கவே சுகமாக இருக்கு!’’‘‘தீபா சன்னதி, ஸ்வாதின்னு எப்படி இருக்கு?’’

‘‘தீபா சன்னதிக்கு இதுல பெரிய ரோல். ‘பளிச்’னு உயரமா ஆர்யா-தீபா ஜோடி அழகா இருக்கு. இதுதான் கதைன்னு முடிவான வேகத்துல அதுக்கான எல்லா ஆர்ட்டிஸ்ட்களையும் முடிவு பண்ணிட்டேன். மிக முக்கியமா இருந்தது ஒரு கேரக்டர். அதுக்கு செலக்ட் ஆனதுதான் தீபா சன்னதி. இப்ப பார்க்கிற நேரம் டெடிகேட்டா பண்ணியிருக்காங்க தீபா. ‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதி ஜாலி. கிருஷ்ணாவுக்கு அவங்கதான் ஜோடி. பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் மட்டும்தான் இவனுக்கு செய்யத் தெரியும்னு என்னை யாரும் சொல்லிடக் கூடாது. ஆர்யா மாதிரி அடுத்த வரிசையையும் இயக்கி ஹிட் கொடுத்தாதான் நமக்கு மதிப்பு. அதை உணர்ந்திருக்கேன். அதுக்கு அடையாளம்தான் ‘யட்சன்’!’’

Comments