சகலகலா வல்லவன்: திரை விமர்சனம்!!!

6th of August 2015
சென்னை:ஊராட்சி தலைவர் பிரபுவின் மகனான ஜெயம் ரவி, அப்பாவின் அரசியல் வேலைகளை கவனிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வெட்டித்தனமாக நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். அதே ஊரில், அரசியல் கட்சி நடத்தும் பேரில் வெட்டித்தனமாக ஊர் சுற்றி வரும் சூரி தான் ஜெயம் ரவிக்கு வில்லன்.

சூரியின் முறை பெண்ணான அஞ்சலியை ஜெயம் ரவி காதலிக்க, அவரும் ஜெயம் ரவியை காதலிக்கிறார். இதற்கிடையில், தனது திருமணத்திற்காக தனது உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க கிராமத்திற்கு வரும் திரிஷாவுக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணம் நடந்து விடுகிறது. ஜெயம் ரவியின் கனெக்ஷன் அஞ்சலியிடம் இருக்க எப்படி இந்த கனெக்ஷன் மாற்றம், அஞ்சலியின் நிலை என்ன? படித்த திரிஷாவுக்கும் படிக்காத ஜெயம் ரவிக்கும் ஒத்துப் போனதா? என்பது தான் படத்தின் கதை.
காதல் நாயகன், ஆக்ஷன் ஹீரோ, அம்மா பிள்ளை என்று பல கதாபாத்திரங்களில் நடித்த ஜெயம் ரவி, இந்த படத்தில் கசமுசா ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார்.  அஞ்சலியுடன் காதல் கசமுசாவில் தொடங்கி, சூரியுடன் வெத்து சண்டை போடும் காட்சி என  அத்தனை காட்சிகளிலும் பட்டும் படாமலும்  நடித்துவிட்டு போகிறார்.
ஜெயம் ரவியின் மனைவியாக திரிஷா நடிப்பில் ஸ்கோர் செய்ய, காதலியாக அஞ்சலி கவர்ச்சியில் ஸ்கோர் செய்கிறார்.
படம் முழுவதும் வரும் சூரி, நகைச்சுவை என்ற பெயரில், படம் முழுவதும் சொற்பொழிவு ஆற்றுகிறார். 
ஒரு சில நிமிடங்களே வந்தாலும் விவேக்கின் காமெடி காட்சிகளுக்கு லட்சம் லைக்குகள் கொடுக்கலாம். மொட்டை அடித்த வேடம், முடி வைத்த வேடம் என்று இரு வேடங்களில், 20 நிமிடத்தில் திரையரங்கை சிரிப்பு சத்தத்தால் நிரப்பி விடுகிறார்.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
மசாலாத்தனமான படம் தான் என்றாலும் இறுதியில், கணவன் - மனைவி சண்டைக் குறித்து சிறு மெசஜ் சொன்ன இயக்குனர் சுராஜ்-க்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம். மற்றபடி, அவருடைய ரெகுலர் படங்கள் பாணியில் தான்,  இந்த படமும் மசாலத் தனமாக இருக்கிறதே தவிர மற்றபடி புதுசாக ஒன்றுமில்லை.

Comments