வாலு' படத்தை விமர்சித்தேனா? நடிகர் ஸ்ரீகாந்த் மறுப்பு!

17th of August 2015
சென்னை:நடிகர் சிம்பு நடித்த, 'வாலு' படம் குறித்து, எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை,'' என, நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். தமிழில், ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உட்பட, 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது, 'சவுகார்பேட்டை, சாமியாட்டம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த, 'நம்பியார், ஓம் சாந்தி ஓம்' படங்கள், விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில், சிம்பு நடித்த, வாலு படம் பற்றி தவறான கருத்துக்களை, 'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளதாக, நேற்று தகவல் பரவியது.
 
நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:என் பெயரில், டுவிட்டரில் யாரோ வேண்டுமென்றே கணக்கு துவக்கி, வாலு படம் பற்றியும், சிம்பு பற்றியும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அவை போலியானவை; சிம்பு என் நெருங்கிய நண்பர்; அஜீத் மற்றும் சிம்புவின் ரசிகர்களை, நான் ஒரு போதும் விமர்சித்ததில்லை.
 
நான் இதுவரை, டுவிட்டரில் எந்த ஒரு கணக்கையும் வைக்கவில்லை. யாரோ சில விஷமிகள், என் பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்; இது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது சட்ட
ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வேன்.இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

Comments