தனி ஒருவன் விமர்சனம் - சமூக அக்கறையுள்ள ஒரு ஆக்சன் படம்!!!

30th of August 2015
சென்னை:பெரும்பாலும் டப்பிங் படங்களையே இயக்குகிறார் ஜெயம் ராஜா என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் தற்போது தன் தம்பி ஜெயம் ரவிக்கு இதுவரை ஏற்காத காக்கி சட்டையை போட்டு விட்டு முற்றிலும் புதிய கதையை கொடுத்துள்ளார். ஜெயம் ராஜாவின் ராசியான ஹீரோவான அவரது தம்பி ஜெயம் ரவியுடன், அரவிந்தசாமியும் நயந்தாராவும் இணைந்து நடிக்க, ஏஜிஎஸ் தயாரிப்பில்  வெளியாகியிருக்கும் படம், தனி ஒருவன்.
 
தமிழ்நாட்டையையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘சைண்டிஸ்ட் தாதா’ அர்விந்தசாமியை, போலீஸ்கார் ஜெயம் ரவி எப்படி அழித்தார் என்பதே ஒருவரிக் கதை. ஒரு அதிரடியான முன்கதையுடன் படம் ஆரம்பிக்கிறது. அந்த முன்கதை யாருக்கானது என்பது நல்ல ட்விஸ்ட். ஐபிஎஸ் போலீஸ் ட்ரெய்னிங்கில் இருக்கும் ஜெயம்ரவி, அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் அதிரடி ரமணாவாக இருக்கிறார். இரவு நேரத்தில் நடக்கும் பல குற்றங்களை, தன்னுடன் ட்ரெய்னிங்கில் இருக்கும் மூன்று நண்பர்கள் துணையுடன் தடுத்து நிறுத்தி, போலீஸ்க்கு தகவல் கொடுப்பது அவரது ஹாபி. 
 
 அப்படிச் செய்யும்போது தான் பெரும்பாலான சிறுகுற்றங்கள் வேறு ஏதோ பெரிய குற்றங்களுக்காக செய்யப்படுகின்றன என்று கண்டுபிடிக்கிறார். இதற்கெல்லாம் மூலகாரணம் யார் என்று துப்பறிகையில் சைண்டிஸ்ட்டாகவும் மினிஸ்டர் தம்பி ராமையாவின் பையனாகவும் இருக்கும் அரவிந்தசாமி தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தெரிகிறது. அதன்பின் அவரை அழிக்க, ஜெயம் ரவி திட்டம்போடுகிறார். அரவிந்தசாமி பதிலடி கொடுக்க, விறுவிறு ஆக்சன் ஆரம்பமாகிறது. படத்தின் பெரிய பிரச்சினையே ஆரம்பக்காட்சிகள் அநியாயத்திற்கு ஜம்ப் ஆகி நகர்கின்றன. மனதில் ஒட்டாத ஹீரோவின் கேரக்டரைசேசன் தான். திடீர், திடீர் என என்னென்னவோ நடக்க, போதாக்குறைக்கு நயந்தாரா வந்து சேர்கிறார்.
 
 ஐபிஎஸ் ட்ரெய்னிங்கிலேயே அவருடன் ஒரு ஒன்சைடு லவ் ட்ராக். நமக்கு ஒருமாதிரி சலிப்பு ஏற்படும் போது, அரவிந்தசாமி அறிமுகம் ஆகிறார். படத்தில் அற்புதமான விஷயம், அரவிந்தசாமி கேரக்டர். அழகான வில்லன் என்றாலும் அருமையான கேரக்டர் ஸ்கெட்ச். ஜெயம்ரவியின் உடலிலேயே ஒட்டுக்கேட்கும் கருவி வைத்து, ரவியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து பதிலடி கொடுப்பது பல ஜேம்ஸ்பாண்ட் படங்களை நினைவுடினாலும் மிக அருமை. பாதிப்படம், அந்த கண்ணாமூச்சி ஆட்டத்திலேயே விறுவிறுப்பாகச் செல்கிறது. அரசை மிரட்டும் கார்போரேட், மருந்துவிற்பனையில் நடக்கும் அநியாயம், ஏரி ஆக்ரமிப்பு என சமூக அக்கறையுடன் பலவிஷயங்களை ஜெயம்ராஜா தொட்டிருக்கிறார், நமக்கான பிரச்சினையைத் தான் பேசுகிறார்கள். ஆனால் பெர்சனலாக மெயின் கேரக்டர்கள் நம்மை டச் பண்ணாததால், கொஞ்சம் அந்நியமாகவே உணர்கிறோம். இந்தமாதிரிக் கதைகளில் லாஜிக்கும் முக்கியம். ஆனால் ஐபிஎஸ் ட்ரெய்னிங் முடிந்ததும், வில்லன்களை டீல் பண்ணும் வேலை ஜெயம்ரவிக்கே கிடைக்கிறது.
 
மந்திரி, முதல்வர் என பெரிய ரேஞ்சில் தொடர்பில் இருக்கும் ஆட்களைக்கூட, ஜஸ்ட் லைக் தட் கைது செய்கிறார். ஐபிஎஸ் முடித்தபின்பும், மற்ற நண்பர்களும் இவருடனே சுற்றுகிறார்கள். லாஜிக்கில் நிறைய கோட்டை விட்டிருக்கிறார்கள். தம்பி ராமையாவும் அரவிந்தசாமியும் பேசிக்கொள்ளும் காட்சிகள் எல்லாமே கலக்கல் தான். முட்டாள் அப்பாவாக தம்பி ராமையா பின்னியிருக்கிறார். ஆனால் நெச்சிக்குப்பத்து ஆள், வழக்கமான தமிழில் பேசுகிற அளவிற்கு கேர்லெஸ்ஸாக இருந்திருக்கிறது படக்குழு. இந்த லட்சியத்தை அடையவில்லை என்றால் ஹீரோவுக்கு என்ன இழப்பு என்று பார்த்தால், ஒன்றுமே இல்லை. மீகாமனில் இருந்த அதே பிரச்சினை. ஆக்சன் போர்சனை மட்டும் அருமையாக உருவாக்கிவிட்டு, மற்ற எல்லாவற்றிலும் சொதப்பியிருக்கிறார்கள். 
 
 இளம்புயல் என்று பட்டம் போடுகிறார்கள். அதற்கு ஏற்றபடியே ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். வயதும் ஆவதால், சாக்லேட் பாய் இமேஜை உடைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். கொடுமை கண்டும் துடிக்கும் புரட்சியாளனாக, நண்பனின் இழப்பினால் கலங்குபவராக, வில்லனை எதிர்கொள்ள முடியாமல் குழம்புபவராக, முடிவில் புத்திசாலித்தனமாக ஜெயிப்பவராக நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர். அதைச் செவ்வனே செய்திருக்கிறார். புரட்சி ஹீரோவை ஒன்சைடாக லவ் பண்ணுவது, ஹீரோவின் ஆபரேசனுக்கு(!) உதவுவது, அட்வைஸ் பண்ணுவது என வழக்கத்திற்கு மாறான கேரக்டர். உடம்பைக் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார். முகத்தில் முதுமை எட்டிப்பார்த்தாலும், நடிப்பில் குறையில்லை. சிவப்பான இவர் ஏன் படத்தில் கருப்பாகவே வருகிறார் என்பது தான் புரியவில்லை. வில்லன் கேரக்டரை எழுதிவிட்டு, பிறகு தான் மற்ற கேரக்டர்களையே உருவாக்கியிருப்பார்கள் போல..நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். ஆனால் வில்லன் வேடத்திற்கு, இந்த ஆணழகன் பொருந்துகிறாரா என்றால் இல்லையென்று தான் சொல்லவேண்டும்.
 
கிளைமாக்ஸுக்கு சற்றுமுன்பு தான் அவரது முகத்தில் வில்லத்தனம் எட்டிப்பார்க்கிறது. நெகடிவ் பாயிண்ட்ஸ்: - ஸ்மூத்தாக இல்லாமல் துண்டு, துண்டாக நிற்கும் ஆரம்பக்காட்சிகள்..மோசமான செட்டப். - படம் முழுக்கவே பல இடங்களில் சீன்கள் பட், பட்டென்று கட்டாகின்றன. திரைக்கதையும், எடிட்டிங்கும் பிண்ணனி இசையும் அந்த இடங்களில் காலைவாரியிருக்கின்றன. - அதிரடி பிண்ணனி இசையில் இருக்கும் ஒரு சீன், சட்டென்று முடிந்து திடீரென மெலெடி இசை ஆரம்ப்பிக்கிறது. முதல்முறையாக, சொந்தமாக படம் இயக்குவதால் வந்த பிரச்சினையா என்று தெரியவில்லை!! - மனதில் ஒட்டாத கேரக்டர்களால், திரையில் நடப்பவற்றுடன் ஒன்றமுடியாத நிலை. பாசிடிவ் பாயிண்ட்ஸ்: - வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் - சமூக அக்கறையுடன் மக்கள் பிரச்சினையைப் பேசியிருப்பது - பல இடங்களில் கைதட்ட வைக்கும் வசனங்கள் -
 
நடிகர்கள் :
 
ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், நாசர், சஞ்சனாசிங், வம்சிகிருஷ்ணா
 
இசையமைப்பாளர் :
 
ஹிப்ஹாப் தமிழா’ ஆதி
 
ஒளிப்பதிவு : ராம்ஜி
 
இயக்கம் : மோகன் ராஜா
 
தயாரிப்பாளர் : ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்
ஜெயம்ரவி & அரவிந்தசாமி இணைந்து நடிப்பதால் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பு சமூக அக்கறையுள்ள ஒரு ஆக்சன் படம் கண்டிப்பாக பார்க்கலாம் .

Comments