விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் பாயும்புலி'. வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் வைரமுத்து பேசியதாவது:
ஒரு மேடையில் பேசுகிறவர்களுக்கு தருகிற மரியாதை அங்கு கட்டிக்காக்கிற கனத்த மௌனம்தான்.
கரவொலிகளால் கருத்துகள் காயப்பட்டுவிடக் கூடாது. நல்ல மௌனம்தான் கருத்துகளை வாங்கி வைத்துக் கொள்கிற நல்ல வாகனம்.
'பாயும்புலி' படத்தை வாழ்த்துவதில் எனக்கு உரிமை இருக்கிறது. முழுப்படத்தையும் பார்த்தவன் என்கிற முறையில் எனக்கு உரிமை உண்டு. காரணம் சுசீந்திரன் அப்படி இயக்கியுள்ளார். விஷால் உயரமானவர்தான், சுசீந்திரனின் இந்தப்படத்துக்குப் பிறகு ஓரங்குலமாவது உயர்வார். காரணம் படத்தின் நம்பகத் தன்மை அப்படி உள்ளது.
சினிமாவே நம்ப வைக்கப்படுகிற தொழில் நுட்பப் பொய்தான். பொய்யின் அடியிலுள்ள சத்தியத்தை நம்ப வைப்பதுதான் சினிமா, அதற்குத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறோம்.
விஷாலின் கலை வரலாற்றில் இது ஒருமுக்கிய படம். இப்படத்துக்கு நான் ஒன்றரை நிமிடப் பாட்டு ஒன்று எழுதியுள்ளேன்.
ஒன்றரை நிமிடத்தில்பாட்டு என்கிறபோது அதுவே தண்டனைதான். சாலையின் குறுக்கே கடக்க பயப்படும் பெண்ணைப் பற்றியதுதான் 'யாரந்த முயல்குட்டி 'பாட்டு.
ஆண்களுக்குப் பயந்த பெண்களைப் பிடிக்கும்; பெண்களுக்கு முட்டாள் ஆண்களைப் பிடிக்கும்.
'யாரந்த முயல்குட்டி' இதுதான் பல்லவி.
'யாரந்த முயல்குட்டி,
உன் பேரென்ன முயல்குட்டி ?
வெள்ளை வெள்ளையாய், வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்,
யாரந்த முயல்குட்டி'
என்று எழுதினேன்.
அதில் நடித்த காஜல் இப்போது தமிழ்நாட்டு நடிகையாகி விட்டார். தமிழ்க் குடிமகளாகி விட்டார். அவரை நான் ஆசீர்வதிக்கிறேன். ஆனால், அடுத்த மேடையில் அவர் தமிழில் பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம். பாமரனின் கவிதை சினிமாப்பாடல். நான் 8000 பாடல்கள் எழுதியிருக்கிறேன். 7965 பாடல்கள் மெட்டுக்கு எழுதியிருக்கிறேன். 35 தான் பாட்டுக்கு மெட்டு, கவிதைக்கு மெட்டு என்று அமைத்திருக்கிறார்கள்.
சுசீந்திரன் குறைந்தபட்ச உத்தரவாதமுள்ள இயக்குநர். அவர் இயக்கிய எல்லாமே வெற்றிப் படங்கள். ஒரு படம் எங்கே உட்காரும்? ஒன்பதாவது ரீலில் கதை உட்கார்ந்தால் பிறகு எழவேண்டும். எழவில்லை என்றால் படம் எழாது.
சுசீந்திரனின் வெற்றிச் சூத்திரம் என்ன தெரியுமா? ராமாயணத்தில் வனவாசம் வரும்போது கதை உட்கார்ந்து விடும். அங்கே மாரீசன் என்கிற பாத்திரத்தை வைத்து வால்மீகி கதையை எழ வைத்திருப்பார். மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் வரும்போது கதை போரடிக்கும். கதை உட்காரும் இடம் அது. அப்போது கீசகன் என்கிற பாத்திரத்தைக் கொண்டு வந்து வைப்பார் வியாசர். அதன் பிறகு கதை இறக்கை கட்டிப் பறக்கும்.
அப்படித்தான் சுசீந்திரன் படங்களில் இடையில் ஒரு பாத்திரம் வந்து கதையை வேகப்படுத்தும். இதுதான் சுசீந்திரனின் சூத்திரம். இதை வளரும் இயக்குநர்களுக்கும் எதிர்கால இயக்குநர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். என் வரிகளுக்கு இசையமைத்த இமானுக்கு நன்றி என்றார்.
Comments
Post a Comment