பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது” – ‘புலி’ விழாவில் விஜய் நெகிழ்ச்சி!!!

3rd of August 2015
சென்னை:பண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்பே அதற்கான கோலாகலம் ஆரம்பித்து விடுவது போலத்தான் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
எப்போதுமே தன்னுடைய பட விழாக்கள் ஆரம்பிக்கும் நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்னதாக மட்டுமே அரங்கத்தில் நுழையும் விஜய், இந்த முறை முதல் ஆளாக வந்திருந்து, விழாவுக்கு வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார். விழாவில் புலி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
 
விஜய்-ஸ்ருதிஹாசன் இணைந்து ஏற்கனவே ஹிட்டான ‘ஏண்டி ஏண்டி’ பாடலை ஸ்ருதிஹாசன் மேடையில் பாடினார். இந்த விழாவிற்கு டி.ராஜேந்தர் வருகை தந்ததும், விஜய்யை புகழ்ந்து 15 நிமிடங்கள் புகழ்ந்து பேசியதும் தான் ஹைலைட்டான விஷயமாக அமைந்தது.
 
டி.ஆர் பேசும்போது, ‘‘விஜய் ஒரு உண்மையான தமிழன். என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என்று தெரிந்தும் தனது சகோதரனாக நினைத்து அவனுடைய படம் வெளிவர உதவி செய்துள்ளார். அவரது உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்” என தொடர்ந்து பஞ்ச் வசனங்களால் புகழ்ந்து தள்ள கூச்சத்தால் நெளிந்த விஜய் டக்கென மேடையேறி சென்று டி.ராஜேந்தரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 
விஜய் பேசும்போது இந்தமுறை சின்னச்சின்ன குட்டிக்கதைகளுடன் பேசியது புதிதாக இருந்தது. “பொது வாழ்க்கையில் பரீட்சை எழுதுவதற்கு நிறைய பேர் இருப்பார்கள், ஆனால் மார்க் போடுவது சில பேர்தான். ஆனால், சினிமாவில் பரீட்சை எழுதுவது சில பேர்தான். மார்க் போடுவதற்குத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் பரீட்சை எழுதியிருக்கிறோம். நீங்கள் தான் தகுந்த மார்க் போடவேண்டும்” என டச்சிங்காக பேசினார்.
 
குறிப்பாக “எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வைத்துதான் பழக்கம். எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். ஆனால், பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது. நிறைய தோல்விகளால் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும், நிறைய அவமானங்கள் இருக்கிறது” என்று பேசியது மனதை நெகிழ வைத்தது.
 
வழக்கமாக யாரோ வி.ஐ.பி வெளியிட இனொரு வி.ஐ.பி தான் சிடியை பெற்றுக்கொள்வார். ஆனால் இந்தமுறை ஒரு மாறுதலாக ‘புலி’ படத்தின் ஆடியோ சிடியை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் வெளியிட, அதை விஜய்யின் மனைவி சங்கீதா பெற்றுக் கொண்டார்.

Comments