ஆரஞ்சு மிட்டாய்: திரை விமர்சனம்!!!

1st of August 2015
சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி இளம் ஹீரோக்களின் பட்டியலில் முக்கியமான இடத்தில் உள்ள விஜய் சேதுபதி, 60 வயதை கடந்தவராக நடித்துள்ள படம் 'ஆரஞ்சு மிட்டாய்'.

இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த படங்கள், இந்த படத்தில் அவர் போட்டுள்ள புதிய கெட்டப், அனைத்தும் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? என்று பார்ப்போம்.


தனியாக ஒரு வீட்டில் வாழும் வயதானவரான விஜய் சேதுபதி, தனது தனிமையின் விரக்திக்காக, தனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது என்று பொய் சொல்லி, ஆம்புலன்ஸை வரவைத்து, வீடு டூ மருத்துவமனை, மருத்துவமனை டூ வீடு என்று அடிக்கடி சுற்றுகிறார்.

ஆப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயணத்தின் போது, முதலுதவி நிபுணர் ரமேஷ் திலக் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் அருள்பாலா இருவரும் விஜய் சேதுபதியிடம் சிக்கிக்கொண்டு, அவருடைய சீண்டலுக்கு ஆளாகிறார்கள்.

திமிரான பேச்சு, தெனாவட்டான நடவடிக்கை என்று வயதான வாலிபனாக நடந்துக்கொள்ளும் விஜய் சேதுபதி மீது எரிச்சல் அடையும் ரமேஷ் திலக் மற்றும் அருள்பாலா, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்களா, அவர்களை விஜய் சேதுபதி என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை.

கதை என்று பார்த்தால் ஒண்ணுமில்லை என்று தான் சொல்ல வேண்டும். வயதானவர்களின் சிறு பிள்ளைத்தனமான ஆசைகளையும், வயதானக்காலத்தில் அவர்களை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும், இயக்குனர் பிஜூ விஸ்வநாத் சொல்லியிருக்கிறார்.

நரைத்த தலை முடி, தாடி, தொப்பை என்று வயதான வேடத்தின் கெட்டப்பில் விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது, என்ற ரீதியில் விஜய் சேதுபதி, ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் அடாவடித்தனம் செய்வது, போலீசாரிடம் எகத்தாளம் பேசுவது, மருத்துவரிடம் நியாயம் கேட்பது என்று காட்சிக்கு காட்சி  தனது கதாபாத்திரத்தை ஆடியன்ஸ் ரசிக்கும்படி செய்துள்ளார். அதிலும், என் பையன் யார் தெரியுமா? அவன்  ஒரு ஜெனர்லிஸ்ட், என்று அடிக்கடி சொல்லி மிரட்டும் போதும் சரி, குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடும் காட்சியும் சரி, தனக்கான படமாக இப்படத்தை விஜய் சேதுபதி செதுக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் அருள்பாலா, முதல் உதவி நிபுணராக வரும் ரமேஷ் திலக், அவருடைய காதலியாக அஸ்ரிதா, விஜய் சேதுபதியின் மகனாக சில காட்சிகள் வரும் கருணாகரன், அனைவரும் பொருத்தமான தேர்வு.

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ள  அளவுக்கு, பிஜூ விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கவில்லை. லைட்டிங், நவீன உக்தி என்று எதையும் பயன்படுத்தாமல் ரொம்ப சாதாரணமாக காட்சிகளை படமாக்கியுள்ள ஒளிப்பதிவாளரை, எதார்த்தம் என்று சொல்லி பாராட்டினாலும், பல காட்சிகளில் நடிகர்கள் அனைவரும் மஞ்சள் பூசிக்கொண்டிருப்பது போல, அநியாயத்துக்கு மஞ்சளை வாரி இறைத்திருக்கிறார்.

தமிழகத்தில் கடைக்கோடி கிரமாங்களைக் காட்டி வந்த பாரதிராஜா கூட, தற்போது கான்கிரேட் போட்ட சாலைகள் உடைய கிராமத்தை காட்ட தொடங்கிவிட்ட நிலையில், இயக்குனர் பிஜூ காட்டிய கிராமம் அநியாயத்துக்கு சினிமாத்தனம்.

முதுமை என்பது அனைவருக்கும் வரும், அவர்களை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும், என்பதை ஒரு சில கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு இயக்குனர் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது என்றாலும், அதை சொல்லிய விதத்தில் எந்தவிதமான சுவாரஸ்யமும், அழுத்தமும் இல்லை. ஆம்புலன்ஸில் முதியவர் பயணிக்கிறார்...பயணிக்கிறார்...பயணிக்கிறார்....,என்ற  கோணத்தில் நகரும் முதல் பாதி படம் தாங்க முடியல சாமி. இரண்டாம் பத்தியில் தான், சொல்ல வேண்டியதை இயக்குனர்  சொல்கிறார்.

வயதான கெட்டப் போட ஆசைப்பட்ட விஜய் சேதுபதி, அதற்காக அவரே இப்படத்தின் கதையை எழுதி, அவரே தயாரித்தும் இருக்கிறார். கெட்டப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள விஜய் சேதுபதி, பட்ஜெட்டுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதனால், தான் ஒரு திமிங்கலமாக இருந்தாலும், குட்டையில் நீச்சல் அடித்து, தன்னை மட்டுமே மக்களின் கண்களுக்கு பளிச்சென்று காட்டியுள்ளார்.

விஜய் சேதுபதியை  ஓவர் பர்பாமன்ஸ் செய்ய வைத்து, காட்சிகளை அதிகரித்து, படத்தின் நீளத்தை வளர்க்காமல் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான அளவில் படத்தை முடித்ததற்காக  இயக்குனரை வஞ்சனை இல்லாமல் பாராட்டலாம்.

வீடு, தலைமுறைகள் போன்ற படங்களை இயக்குனர் பாலுமகேந்திரா, கொஞ்சம் வேகமாக எடுத்திருந்தால் எப்படி இருக்கும், அப்படி ஒரு ஸ்டைலில் இயக்குனர் இப்படத்தின் காட்சிகளையும், திரைக்கதை போக்கையும் கையாண்டுள்ளார். ஆக, அப்படிப்பட்ட படங்களை ரசிக்கும் நபராக நீங்கள் இருந்தால், இந்த படம் உங்களுக்கு ஒகே தான்.

மேலே சொன்னது சரி தான் என்றாலும், படத்தில் போதிய அழுத்தமும், இயக்குனர் தான் சொல்ல வந்ததை மக்கள் மனதில் சரியாக பதிய வைக்கவில்லை என்றால் அந்த படம் வேலைக்காகாது, என்று நினைப்பவராக இருந்தால், வயதானவர்களை குழந்தைகளாக பார்க்க வேண்டும், என்பதை சொல்லுவதற்காக,  படத்தில் விஜய் சேதுபதியை புளிப்பும், இனிப்பும் கலந்த ஆரஞ்சு மிட்டாயை சாப்பிட வைத்த இயக்குனர், ரசிகர்களுக்கு கசப்பு மிட்டாய் கொடுத்திருக்கிறார், என்று தான் சொல்வீர்கள்.

Comments