அஞ்சலியை சிபாரிசு செய்தது நான் தான்: ஜெயம் ரவி ஓபன் டாக்!!!

29th of July 2015
சென்னை:முதலில் 'அப்பாடக்கர்' என்று தலைப்பு வைக்கப்பட்டு தற்போது 'சகலகலா வல்லவன்' என்று மாற்றப்பட்டுள்ள ஜெயம் ரவியின் படத்தில் திரிஷா, அஞ்சலி என இரு நாயகிகள் நடிக்கிறார்கள். இதி, அஞ்சலியை இந்த படத்தில் நடிக்க வைக்க ஜெயம் ரவி தான் சிபாரிசு செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், 'சகலகலா வல்லவன்' படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளரர்களை சந்தித்தனர். அப்போதும் ஜெயம் ரவியிடம், அஞ்சலிக்கு சுபாரிசு செய்தது குறித்து கேட்க, அதற்கு பதில் அளித்த ரவி, "அஞ்சலி படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலியை சிபாரிசு செய்தது நான்தான். மற்றவர்கள் 10 படத்தில் கமர்ஷியலாக நடித்தால் ஒரு படத்தில்தான் சோதனை முயற்சியாக நடிப்பார்கள். அஞ்சலி 10 படத்தில் சோதனை முயற்சியாக நடிப்பவர். ஒரு படத்தில் மட்டும்தான் கமர்ஷியலாக நடிப்பார்." என்று தெரிவித்தார்.
மேலும் படம் குறித்து குரிய ஜெயம் ரவி, "இந்த 'சகலகலா வல்லவன்' என்கிற தலைப்புக்கு நான் அருகதையானவனா என்று தெரியாது. ஆனால் அந்த  'சகலகலா வல்லவன்' வேறு; இந்த 'சகலகலா வல்லவன்' வேறு. 'அப்பாடக்கர்' என்றால் அனைத்தும் கற்றவன் என்று அர்த்தம் வந்ததால் இந்தத் தலைப்பை வைத்தோம்.
அடிப்படையில் இயக்குநர் சுராஜை எனக்குப் பிடிக்கும் அவரது காமெடிக்கு நான் விசிறி. எப்போதும் நான் சீரியஸாகத்தான் கதை கேட்பேன். அப்படித்தான் என்னைப்பற்றிச் சொல்வார்கள். இந்தக் கதையை சுராஜ் சொன்னபோது சிரித்துக்கொண்டே கேட்டேன்.
படப்பிடிப்பில் த்ரிஷாவிடம் நான் பேசினாலே கேமராமேன் செந்தில்குமாருக்குப் பிடிக்காது. உடனே ஷாட் ரெடி என்று  அழைப்பார். காரணம் பொறாமையல்ல, அந்த அளவுக்கு வேகமாக எடுத்தார் என்கிறேன். சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. தினேஷ் மாஸ்டரின் பையன் ஹரிதான் மாஸ்டர்.
த்ரிஷாவுடன் இது எனக்கு மூன்றாவது படம். எல்லாரும் கேட்கிறார்கள், த்ரிஷாவை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? தொடர்ந்து நடிக்கிறீர்களே என்று.  ஆமாம் த்ரிஷா எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சந்தேகமில்லை. இதிலென்ன தப்பு? த்ரிஷா எனக்கு நல்ல நண்பர். அவர் எல்லா விஷயத்திலும் தெளிவாக இருப்பார். அந்தத் தெளிவு எனக்குப் பிடிக்கும்.
த்ரிஷாவும் நானும் பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்து வருகிறோம். இந்தப் படத்தில் அவர் தமிழில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேல் சூரி நன்றாக நடித்துள்ளார். அவர் அடுத்த காமெடி  சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார். விவேக் சார் ஈகோ பார்க்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். 'குமரன் சன் ஆப் மகாலட்சுமி'க்குப் பிறகு அவருடன் நடித்தேன்.
இதை வெறும் காமெடி படம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஒரு நல்ல கதையில் முக்கியமான ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறோம். அடுத்தப் பத்து ஆண்டுகளில், கணவன்-மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்பார்கள் போலிருக்கிறது. இன்றைக்குத் திருமண அமைப்பு ஊசலாட்டமாக உள்ளது. அவநம்பிக்கை நிலவுகிறது. அதற்கு இந்தப் படத்தில் நல்ல பதில் சொல்லப்பட்டுள்ளது. நமது பலம் திருமணம், குடும்பம் என்று சொல்லப்பட்டுள்ளது." என்றார்.
 


Comments