எப்போவுமே நான் அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகை த்ரிஷா விளக்கம்!!!

24th of July 2015
சென்னை:அதிமுகவில் தான் இணையப் போவதாக வெளியான தகவல்கள் உண்மையில்லாதவை என்றும், இப்போது மட்டுமில்லை எப்போதுமே தனக்கு அரசியலில் இறங்கும் திட்டமில்லை என்றும் நடிகை த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.

கமல், அஜித், விஜய், உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி மலையாள, தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளின் பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை கடந்த 15 வருடங்களாக தக்க வைத்து வருகிறார் நடிகை த்ரிஷா.
இந்நிலையில் த்ரிஷா அரசியலில் சேரவிருக்கிறார் எனவும், அதிமுக கட்சியில் இணைகிறார் எனவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலரும், அரசியலில் களமிறங்கி சாதனை படைத்து வருகிறார்கள். நடிகைகள் குஷ்பு, ரோஜா, விஜயசாந்தி, ஜெயப்பிரதா, ஹேமமாலினி உள்ளிட்ட பல நடிகைகள் பல்வேறு கட்சிகளில் இணைந்து பணியாற்றி பல்வேறு பதவிகளையும் அலங்கரித்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் தற்போது த்ரிஷாவும் அரசியலில் இறங்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின . தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா, முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது வாங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இதனால் பலரும் அவர் அதிமுகவில் இணையப் போகிறார் என்று பரபரப்பாக தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.
 
இதனையடுத்து இந்தச் செய்திக்கு த்ரிஷா மறுப்பு தெரிவித்திருக்கிறார். " சமீபத்தில் வெளியாகி இருக்கும் செய்திகள் போல நான் அரசியலில் சேரும் திட்டமில்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அந்த எண்ணம் எனக்கு கிடையாது" என்று கூறியிருக்கிறார்.

Comments