எம்.எஸ்.வியின் கடைசி திரைப்படம் விரைவில் ரிலீஸ்?

20th of July 2015
சென்னைபழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த வாரம் மரணம் அடைந்த செய்தி கோலிவுட் திரையுலகினர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஒருசில காரணங்களால் நின்றுபோன அவர் இசையமைத்த கடைசி படத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

எம்.எஸ்.விஸ்வநாதன் கடைசியாக இசையமைத்த திரைப்படம் 'இது எம்.ஜி.ஆர் இல்லம்'. இந்த படத்தை பிரபல இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்குவதாக இருந்தது. இந்த படத்திற்காக எம்.எஸ்.வி ஏழுபாடல்களை கம்போஸ் செய்து கொடுத்துள்ளார். அதில் ஒரு பாடலை அவரே பாடியுள்ளார். அந்த பாடல் எம்.ஜி.ஆரின் புகழை போற்றும்விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒருசில காரணங்களால் கடந்த சில வருடங்களுக்கு முன் நின்றுபோனது. தற்போது எம்.எஸ்.வி. மறைவை அடுத்து, இந்த படத்தை மீண்டும் தொடங்க இயக்குனர் வி.சி.குகநாதன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிப்பதாக இருந்தது. தற்போது மீண்டும் அவரே நடிப்பாரா? அல்லது அவருக்கு பதில் வேறு யாரேனும் ஒப்பந்தம் செய்யப்படுவார்களா? போன்ற தகவல்களுடன் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என குகநாதன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Comments