தென்னிந்திய நடிகர் சங்க பிரச்னை குறித்து முதல்வரை சந்திப்போம்: விஷால் அணியினர் தகவல்!!!

19th of July 2015
சென்னை:தென்னிந்திய நடிகர் சங்கப் பிரச்னை குறித்து தமிழக முதல்வரைச் சந்தித்து பேசுவோம் என விஷால் தலைமையிலான நடிகர் சங்க அணியினர் தெரிவித்தனர்.தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நிலவி வரும் பிரச்னை, முறைகேடு குறித்து நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் மாவட்டம்தோறும் சென்று நாடக நடிகர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து விளக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை சேலம் மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தினரை நடிகர் விஷால் தலைமையில் நாசர், கருணாஸ், பொன்வண்ணன், நடிகர் சரவணன் ஆகியோர் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது. புதிய கட்டடம் கட்டுவதில் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்தத் தவறுகளை தட்டிக் கேட்டால் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சீர்குலைப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், நாடக நடிகர்களுக்கு எதிரானவர்களாக எங்களை சித்திரிக்கின்றனர். நாடக நடிகர்கள் இல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் இல்லை. இந்த உண்மைகளைத் தெரிவிக்கவே மாவட்டம்தோறும் சென்று நடிகர் சங்க உறுப்பினர்களை சந்தித்து விளக்கி வருகிறோம்.
 
விரைவில் தமிழக முதல்வரைச் சந்தித்து, மூத்த உறுப்பினர் என்ற முறையில் அவரை தேர்தலில் வாக்களிக்க கோரிக்கை வைப்போம். நடிகர் சங்கப் பிரச்னை குறித்தும் அவரிடம் எடுத்துரைப்போம்.
கடந்த கால தேர்தல்களில் தபால் வாக்குகள் பதிவு செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எனவே, சங்க விதிப்படி தபால் வாக்குகளை முறைப்படுத்த வேண்டும் அல்லது அனைவரையும் நேரடியாக வாக்களிக்க ஏற்பாடு செய்யவேண்டும். தேர்தலில் தனுஷ், சிம்பு போட்டியிட்டால் வரவேற்போம்.
 
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி, வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் சங்கத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம் என்றனர்.

Comments