1st of July 2015
சென்னை: அறிமுக நடிகர் நடிகைகள் மற்றும்
தொழில்நுட்ப கலைஞர்களோடு அவ்வபோது தமிழ் சினிமாவில் வெளியாகும் சில
எளிமையான திரைப்படங்கள், ரசிகர்களின் புருவத்தை உயர்த்தச் செய்யும். அப்படி
ஒரு படம் தான் 'ஒரு தோழன் ஒரு தோழி'.
தொழிற்சாலை ஒன்றில் வாரக் கூலி வேலை செய்கிறார்கள் நாயகர்கள் மீனேஷ்
கிருஷ்ணா மற்றும் மனோ தீபன். இதில், மனோ தீபன் நாயகி அஸ்த்ராவை
காதலிக்கிறார். மனோ தீபனின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டாலும், தனது
ஏழ்மையான நிலைமையை நினைத்து காதலை தவிர்க்கும் அஸ்த்ரா, ஒரு கட்டத்தில்
தனது கல்லூரி படிப்பு முடிந்து, தான் ஒரு வேளையில் சேர்ந்த பிறகே கல்யாணம்,
என்ற நிபந்தனையுடன் ஹீரோவின் காதலை ஏற்றுக்கொள்கிறார்.
இவர்களுடைய காதலுக்கு தூது செல்லும் மற்றொரு ஹீரோவான முரட்டு குணம்
படைத்த மீனேஷ் கிருஷ்ணாவும் தனது மாமன் பெண்ணான அபிநிதாவை காதலிக்கிறார்.
இந்த நிலையில், அஸ்த்ரா படிப்புக்காக வட்டிக்கு வாங்கிய பணத்திற்கு ஈடாக
அவரையே அடைய நினைக்கும் வில்லன், நாயகன் - நாயகி காதலுக்கு முட்டுக்கட்டை
போடுகிறார். இவரால் தான் பிரச்சினை வரும் என்று எதிர்ப்பார்க்க, யாரும்
எதிர்ப்பார்க்காத நிலையில்,செல்போன் மூலமாக நாயகிக்கு ஒரு பிரச்சினை
வருகிறது. அது என்ன பிரச்சினை, அதன் மூலம் இவர்கள் எப்படி
பாதிக்கப்படுகிறார்கள்? என்பது தான் க்ளைமாக்ஸ்.
தென் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பலமே அதன்
எளிமை தான். அதேபோல, படத்தில் நடித்த நடிகர்களும் இயல்பாக இருக்க வேண்டும்
என்பதற்காக, அனைவரும் மேக்கப் இன்றி நடித்துள்ளார்கள்.
குறிப்பாக, ஏழை வீட்டு பெண் என்று கூறிவிட்டு, நல்லா பளபளக்குற பெண்ணை
நாயகியாக நடிக்க வைக்காமல், எளிமையான ஒரு அழகோடு உள்ள ஒரு பெண்ணை
நாயகியாக்கிய இயக்குனருக்கு ஆயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம்.
ஒளிப்பதிவாளர் சிவன்குமார் மற்றும் இசையமைப்பாளர் கே.ஜெயக்ரிஷ் ஆகியோரது
பணி பிரம்மாண்டமான முறையில் தனித்துவத்தோடு இல்லை என்றாலும்,
திரைக்கதையின் ஓட்டத்திற்கு தடை ஏதும் ஏற்படுத்தாமல் பயணித்துள்ளது.
காதல், நட்பு என்று நாம் பலமுறை பார்த்த பாணியில் பயணிக்கும் படம்
இரண்டாம் பாதியில் வேறு ஒரு களத்தில் நகர்ந்து, படத்துடன் நம்மை ஒன்றிவிடச்
செய்கிறது.
மக்களின் தேவைக்காக கண்டுபிடிக்கப்படும் சில தொழில்நுட்பங்கள் எப்படி
தவறாக பயன்படுத்தபப்டுகிறது என்றும், அதனால் சில அப்பாவி மக்கள் எப்படி
பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், ஒரு திரைப்படமாக பொழுபோக்கு அம்சத்துடன்
படமாக்கியிருக்கும் இயக்குனர் பி.மோகன், அதே சமயம், எதார்த்ததன்மையை
மீறாமலும் செயல்பட்டுள்ளார்.
இறுதியில் பாதிக்கப்பட்ட நாயகிக்காக ஹீரோக்கள் பழிவாங்கும் முறை, "பழைய
குருடி கதவை திறடி" என்றாகிவிடுகிறது. இப்படி ஒரு படத்திற்கு சற்று
மாறுபட்ட முடிவை வைத்திருந்தால், தமிழ் சினிமாவில் தாக்கத்தை எற்படுத்திய
சில படங்களின் வரிசையில் இப்படமும் முக்கிய இடத்தில் இடம்பெற்றிருக்கும்.
இருப்பினும், 'ஒரு தோழன் ஒரு தோழி' யதார்த்தத்தை விரும்பும் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.
Comments
Post a Comment