7th of June 2015
சென்னை:ஈரானிய திரைப்படங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் திரைப்படங்களைப் பற்றி வியந்து பேசி வந்த, தமிழ் திரையுலகினரும், ரசிகர்களுடம் இனி தமிழ் படங்களையும் வியப்பாக பேசும் விதத்தில் உள்ளது 'காக்கா முட்டை'.
தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உலகம் முழுவது 1000 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸாகியுள்ள படம் ’காக்கா முட்டை’.
இப்படம் உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும், உள்ளூர் விழாக்களிலும் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.
சென்னை குடிசைப் பகுதியில் வாழும் சகோதர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ். இவர்களுடைய அப்பா சிறையில் இருக்க, அம்மா மற்றும் பாட்டியுடன் வாழும், இவர்களுக்கு பீட்சா சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக இவர்களுடைய முயற்சியும், இறுதியில் இவர்கள் பீட்சா சாப்பிட்டார்களா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.
கதை, இரண்டு வரியாக இருந்தாலும், அதை இயக்குநர் மணிகண்டன் படமாக்கியிருக்கும் விதம், திருக்குறளைப் போல அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இப்படிபட்ட இடங்களில் எப்படி படப்பிடிப்பை நடத்தினார்கள்! என்று வியக்கும் அளவுக்கு, ஒவ்வொரு காட்சிகளும், அதன் பின்புலமும் இயல்பை மீறாமல் உள்ளது.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சிறுவர்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரது இயல்பான நடிப்பும், எக்ஷ்பிரெஷனும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
சுகாதாரமான உணவு, காம்பவுண்டிற்குள் மட்டுமே விளையாட்டு என அடங்கி ஒடுங்கி இருக்கும் சிறுவனிடம் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை. ஆனால் ஊரெங்கும் சுற்றித்திரியும் காக்கா முட்டைகளிடம் உலகமே இருக்கிறது என எதார்த்தத்தை பொட்டில் அறைந்தது போல் படம் முழுக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
நாங்க பீட்சா தின்னலனாலும் பரவாயில்ல, எச்சி பீட்சா வேண்டாம்’ என்று தம்பியை அழைத்துச் செல்லும் காட்சி காசுக்கு பஞ்சமே தவிர எங்களிடம் சுயமரியாதைக்கு பஞ்சமில்லை என்பதை விளக்குகிறது. பீட்சா கடை கட்டுவதற்காக காக்கா முட்டையை திருடித் தின்னும் மரத்தை வெட்டும் காட்சியில், சிறுவர்கள் முகத்தில் சொந்த வீட்டை இடிக்கும் சோகத்தை வரவழைக்க இயக்குநர் என்ன கஷ்டப்பட்டாரோ? எல்லா புகழும் அவருக்கே.
பாதிக்கப்பட்ட சிறுவர்களை பகடையாக்கி அரசியல்வாதியும், மீடியாவும் தன்னலத்தோடு நடத்தும் விளையாட்டை பகிரங்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குபவர்களின் முக்கியத்துவத்தை சொல்லவும் தவறவில்லை.
பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை ஆகிய இருவர்களில் சின்ன காக்கா முட்டையான ரமேஷ் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். அதற்காக விக்னேஷ் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியாது. சேட்டைகளினால் ரமேஷ் அதிகம் மனதில் நிற்க, தம்பியின் ஆசைக்காக உழைக்கும் பொறுப்பான அண்ணனாக விக்னேஷ் மனதில் நிற்கிறார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடிக்க ஐஷ்வர்யாவுக்கு அசாத்திய தைரியம் இருந்ததென்றால், அந்த கதாபாத்திரத்திற்காக 5 கிலோவுக்கு மேல் எடை குறைத்து கச்சிதமாய் நடித்ததற்கு அவருக்கு ஒரு சல்யூட்.
இயக்குநர் மணிகண்டன், தான் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். நாம், படம் பார்க்கிறோம், என்ற உணர்வே ஏற்படாத வகையில், அத்தனை காட்சிகளும் நம்மை இயல்பாக கடந்து செல்கிறது. ஜிவி பிரகாஷ் குமாரின் இசையும் காட்சியோடு சேர்ந்து மனதை வருடுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வந்திருந்தாலும், இனிமே வந்தாலும், இந்த ’காக்கா முட்டை’ தமிழ் சினிமாவிற்கு கிடைத்த தங்க முட்டை தான்.
Comments
Post a Comment