கொம்பன் படத்திற்கு தடை கோரி முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு மனு!!!


27th of March 2015
சென்னை:கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'கொம்பன்' படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நாடார் சங்கம் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கொம்பன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டு வந்தாலும், படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. சென்சாரில் இப்படத்துக்கு என்ன சான்றிதழ் என்று கேட்ட போது, "'கொம்பன்' படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இப்போதைக்கு இது மட்டுமே கூற முடியும்" என்று கூறினார்கள்.

இந்நிலையில் கொம்பன் படத்திற்கு தடை கோரி தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சுதந்திர போராட்ட தியாகி வாய்ப்பூட்டு சட்ட வீரர், பேரையூர் வேலுச்சாமி நாடாரைக் களங்கப்படுத்தும் காட்சிகள் நடிகர் கார்த்தி நடித்து முத்தையா இயக்கி வெளிவரவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் உள்ளதாகவும் முதுகுளத்தூர் கலவர பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளதாகவும் வார இருமுறை இதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

தனது சமுதாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத ரேகைசட்டம் (எ) படுக்கை சட்டத்தின் கொடுமைக்கு ஆளான மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது சமுதாய மக்கள் ஏழாயிரம் பேரை திரட்டி போராடி வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளானவர் வீரர் வேலுச்சாமி நாடார்.
 
இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் முதுகுளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்கதேவருக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது. (ஆதாரம் 7-.11.-1936, தி ஹிந்து) 'கொம்பன்' பட இயக்குநர் வீரர் வேலுச்சாமி நாடாரின் தியாகத்தை புரிந்து கொள்ளாமல் முதுகுளத்தூர் கலவரத்திற்க்கு அவர் தான் காரணம் என்பது போல் காட்சிகள் வைத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது.

Comments