6th of February 2015
சென்னை:சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிப்பவனின் இலட்சிய இருப்பு, தன் அடையாளத்தைத் தொலைத்தவரின் ஆதங்கம் இதை அடித்தளமாக வைத்து Shamitabh படத்தின் மூலக்கரு அமைந்திருக்கின்றது.
இகாத்புரி எனும் குக்கிராமத்தில் வசிக்கும் இளைஞன் டேனிஷ் (தனுஷ்). இவனுக்கு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக வேண்டும் என்பதே அவனது கனவு. டேனிஷ் வாய் பேச இயலாதவனாக இருந்தபோதிலும், பாலிவுட்டில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்துவருகிறான்.
தனுஷின் நடிகர் கனவு நிறைவேறுவதற்கு, அக்ஷரா ஹாசன் உதவி செய்கிறார். டேனிஷிற்கு, டப்பிங் குரல் கொடுத்து அவனை பெரிய நடிகராக்க, தனுஷ் உடன் சேர்ந்து, அக்ஷராவும் பாடுபடுகிறார். ஒருநாள், அவர்கள் அமிதாப் சின்கா (அமிதாப்பச்சன்) காண செல்கின்றனர்.
டேனிஷிற்காக டப்பிங் குரல் கொடுக்குமாறு, அமிதாப் சின்காவிடம் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அமிதாப் குரல் கொடுத்தாரா? டேனிஷ் முன்னணி நடிகர் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை...
சீனிகம் மற்றும் பா படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குநர் ஆர்.பால்கி எடுத்துள்ள மூன்றாவது படம் ஷமிதாப். புதுவிதமான கதை தான் என்றாலும், ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திய விதத்தில், இயக்குநர் சற்று கோட்டை விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் பதிவில் தலைப்பில் இருக்கும் SHamitabh VS shAMITABH தான் காட்சிகளை நகர்த்தும் பகடைக் காய்களாய். ஆனால் வழக்கம் போல கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தம், நாலு சண்டை என்ற ரீதியில் அமைந்த மாமூல் மசாலாவும் அல்ல. இயன்றவரை இயல்பாகவே திரைக்கதையோட்டத்தை அமைத்திருப்பதால் முழுமையான வணிக சினிமாவாக இந்தப் படத்தைச் சொல்ல முடியாது.
அமிதாப் பச்சான் என்ற மிகப் பெரும் நடிகருக்கெல்லாம் இந்த மாதிரிக் கதாபாத்திரம் ஊதித்தள்ளக்கூடியது. ஆனால் இந்தப் படமும் இவர் ஏற்று நடித்த பாத்திரமும் அமிதாப் இன் திரையுலக வாழ்வில் தவிர்க்க முடியாத அளவுக்கு படம் முழுக்க நிரம்பியிருக்கிறார். அமிதாப் ஐ விட்டு எந்த நடிகரையும் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட அவரின் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதிதான் படமாகியிருக்கிறது.
இயக்குநர் பால்கி, அமிதாப் பச்சனின் குரலை, மிகவும் மெச்சத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதிலேயே படத்தின் மற்ற அம்சங்களை கோட்டை விட்டுள்ளார். படத்தின் சில காட்சிகள், பார்வையாளர்களுக்கு மிகவும் பிரமிப்பாக அமைந்துள்ளன.
தனுஷ் இற்கு ஷமிதாப் இன்னொரு மிகச்சிறந்த வாய்ப்பு, சிறுவயதில் இருந்தே சினிமா சினிமா என்று அலைந்து, ஏங்கி அந்த வாய்ப்பைப் பற்றிப் பிடிக்க எத்தனிப்பதிலும், புகழின் உச்சியில் இருக்கும் போது தன் சினிமா வாழ்க்கை தொலையப் போகின்றதே என்று துடிக்கும் போதும் சரி, மிகை நடிப்பில்லாது வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் முழுக்க இவரின் அங்க அசைவுகள் தான் பிரதானம்.
இளையராஜா இசையில், பிட்லி பாடல், பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமா நாயகர்களில் கமல்ஹாசன் உயர்ந்தவர்கள் படத்தில் வாய் பேச முடியாத பாத்திரத்தில் முழுமையாக நடித்திருந்தார். கே.பாக்யராஜ் கூட ஒரு கை ஓசை படத்தின் இறுதிக்காட்சி வரை வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார். தனுஷிற்கு இந்தப் படம் வாயிலாக இப்படியானதொரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த நடிகர் போட்டியில் அமிதாப் அல்லது தனுஷ் இந்தப் படத்தில் வந்தது போலவே போட்டி போடப் போகும் கூத்தும் நடக்கப் போகுதோ என்னமோ என்று சொல்லுமளவுக்கு அமைந்திருக்கிறது.
தனுஷ் இன் உடல் மொழிக்கு அமிதாப் இன் குரலைப் பொருத்தும் முதல் காட்சியில் அமையும் நடிப்புப் பயிற்சி கல கல கலக்கல். ஆரம்பத்தில் தனுஷ் இன் உருவத்தோடு அமிதாப் குரலைப் பொருத்திக் கேட்கும் போது ஏற்படும் நெருடலை அமிதாப் வழியாகவே கிண்டலாக "உன்னுடைய உடம்பின் எடையை விட என் குரலின் எடை அதிகம்" என்று பகிர்ந்து சமரசம் கொள்ள வைக்கிறார் இயக்குநர்.
களத்தூர் கண்ணம்மா கமலின் அக்கா மாதிரியே அக்க்ஷரா, உதவி இயக்குநராக இது நாள் வரை இருந்தவர் இப்போது நாயகி ஆன முதல் வாய்ப்பிலேயே உதவி இயக்குநர் பாத்திரத்தில் நடித்திருப்பதும் புதுமை.
படத்தின் மூன்றாவது ஹீரோ என்று அக்ஷரா ஹாசன் என்று சொல்லுமளவிற்கு, அவரது நடிப்பு அமைந்துள்ளது.
பொம்மலாட்டம் புகழ் ருக்மணி ஒரு சில காட்சிகளில் வரும் போது இழுத்து வாருங்கள் தமிழ் சினிமாவுக்கு என்று சொல்லுமளவுக்கு அழகுப் பதுமையாக இருக்கிறார். நாடோடிகள் அபிநயா ஒரு காட்சியில் எட்டிப் பார்க்கிறார்.
படத்தின் மிகப் பெரிய ஏமாற்றம் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் இசையில் கிடைத்த ஆறு முத்தான பாடல்களில் இரண்டை மட்டுமே பயன்படுத்திவிட்டு மீதியைக் கடாசிய போது வந்த எரிச்சல் இன்னமும் அடங்கவில்லை.
எதிர்பார்ப்புகளை சில இடங்களில் பூர்த்தி செய்ய தவறி இருந்தாலும், அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் ஷமிதாப்.
Comments
Post a Comment