8th of January 2015
சென்னை:தமிழில் ஒரு பிம்பத்துக்குள் சிக்கிக் கொண்டதால், பரிசோதனை முயற்சிகளில் தன்னால் ஈடுபட முடியவில்லை என்று நடிகர் தனுஷ் வேதனை வெளியிட்டுள்ளார்.
மேலும், 'ஷமிதாப்' வாய்ப்பு கிடைத்ததன் மூலம் கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியில் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கு பெற்றனர்.
இவ்விழாவில் நடிகர் தனுஷ் பேசும்போது, "தமிழில் என்னால் முடிந்த வரை விதவிதமான பாத்திரங்களில் நடிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால், அங்கு ஒரு பிம்பத்திற்குள் சிக்கிக் கொண்டதால் கட்டுப்பட்டு இருக்கிறேன். இங்கு பாலிவுட்டில் எனக்கு இழப்பதற்கென எதுவுமில்லை. அதனால், பரிசோதனை முயற்சியாக பாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.
இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்ததற்காக பால்கிக்கு நன்றி. எனக்கு இங்கு இழக்க எதுவுமில்லை. அமிதாப் பச்சனுடன் வேலை செய்தது அற்புதமான அனுபவம். அமிதாப்போடு நடிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி உள்ளதா எனத் தெரியவில்லை. கடவுள் இந்தப் படத்தைத் தந்ததன் மூலம் என்னை ஆசிர்வதித்துள்ளார்" என்று தனுஷ் பேசினார்.
Comments
Post a Comment