ஐ விமர்சனம்: ஐ பிரம்மாண்டத்தின் உச்சம்!!!

14th of January 2015
சென்னை:மிஸ்டர் தமிழ்நாடு' லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் தியாவுடன் சேர்ந்து மாடலிங் செய்யும் வாய்ப்பு அமைய, மாடல் 'லீ'யாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைகிறார்.
அவரின் வளர்ச்சி... சிலருக்கு பலவீனமாக அமைய, அவர்கள் அனைவரும் இணைந்து 'நெஞ்சை நிமிர்த்தி'த் திரியும் விக்ரமை, 'கூன்' போட வைக்கிறார்கள். மீண்டும் விக்ரம் நிமிர்ந்தாரா? இல்லையா? என்பதே 'ஐ'.

ரொம்பவும் சாதாரணமான பழிவாங்கல் கதைதான். அதை தன் பாணியில் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

மணக்கோலத்திலிருக்கும் எமி ஜாக்ஸனை, கூன் விக்ரம் கடத்தும் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்துவிடுகிறது 'ஐ'. பின்னர் ஃபிளாஷ்பேக்காக விக்ரம் 'மிஸ்டர் தமிழ்நாடு' அவதாரம் எடுப்பது, மாடலாக மாறுவது, எமியுடன் காதல் செய்வது என முதல் பாதி மெதுவாக பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் வேகமெடுக்கும் திரைக்கதை, விக்ரமின் பழிவாங்கல் நடவடிக்கையின்போது விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

டெக்னிக்கலாக ஷங்கர் படம் எப்போதுமே முதல் தரத்திலிருக்கும். இந்த 'ஐ'யும் அந்த நம்பிக்கையைக் வீணாக்கவில்லை. அழகான லோகோஷன்கள், அற்புதமான இசை, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் மேக்அப், ஆச்சரியப்படுத்தும் சிஜி என எல்லாமே இப்படத்திலும் உயர்தரம்!

முதல்பாதியின் ஸ்லோவான திரைக்கதை, விக்ரம் எமிக்கிடையே இருக்கும் காதலில் ஆழமில்லாமல் இருப்பது, எளிதில் யூகிக்கக்கூடிய 'ட்விஸ்ட்' போன்றவை 'ஐ'யின் பலவீனங்கள். அதோடு... இதற்குத்தானா இவ்வளவு பிரம்மாண்டங்களும்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்! லிங்கேஸன், லீ, கூனன் என மூன்று பரிமாணங்களிலும் அவரின் டெடிகேஷன் மலைக்க வைக்கிறது... 'ஹேட்ஸ் ஆஃப் டு விக்ரம்'.

மாடலிங் பியூட்டி 'தியா' கேரக்டருக்கு 100 சதவிகிதம் பொருந்தியிருக்கிறார் எமி ஜாக்ஸன். நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், அவரைத்தவிர இவ்வளவு 'தாராளம்' காட்ட தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஆள் இல்லை!

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். டாக்டராக வரும் சுரேஷ் கோபி, அமைதியாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக முடித்திருக்கிறார். உபேன் பட்டேல், ராம்குமார் ஆகியோரும் சரியான தேர்வே!

பலம்
1. விக்ரமின் கடின உழைப்பு
2. பாடல்களும், அதை படமாக்கிய இடங்களும், விதமும்!
3. ஒளிப்பதிவு, மேக்அப், சிஜி உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்
1. ரொம்பவும் சாதாரணமான கதை
2. எளிதில் யூகிக்கக் கூடிய 'ட்விஸ்ட்'டுகள்
3. ஆங்காங்கே படத்தை ஸ்லோவாக்கும் ஒருசில காட்சிகள்
4. படத்தின் நீளம்

இவ்வளவு செலவு, இவ்வளவு உழைப்பு இந்தக் கதைக்கு தேவையா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படமாக்கிய விதத்தையும், அற்புதமான லோக்கேஷன்களையும், விக்ரமின் கடின உழைப்பையும் ரசிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு 'ஐ' ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

படத்தின் மொத்த பலமும் விக்ரம் மட்டும்தான். இத்தனை வலிகளையும் ஒரு படத்திற்காக ஒருவர் என்றால் இந்தளவு சாத்தியமில்லை.
 
ஆணழகனாகவும் சரி, அகோரமாகவும் சரி ஒவ்வொரு அசைவிலும்
நம்மை அசையவிடாமல் கட்டிப்போட்டு விடுகிறார்.

Comments