10th of January 2015
சென்னை:விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் புலி என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்படத்தில் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். இவர்களுடன் ஸ்ரீதேவியும், நான் ஈ சுதீப்பும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கெனவே அவர், விஜய் நடித்த சச்சின், வில்லு ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இது அவர், விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் படத்தின் பாடல்கள் குறித்து சில கருத்துக்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.
புலி' படத்தில் சிம்புதேவனின் அற்புதமான திரைக்கதைக்கு பொருந்தும் வகையில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு பாடல்களின் பணிகள் முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த இரண்டில் ஒரு பாடலின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஆறு பாடல்களில் ஒரு பாடலை விஜய் மற்றும் ஸ்ருதிஹாசனை பாடவைக்க தான் திட்டமிட்டு இருப்பதாகவும் இதுகுறித்து இருவரிடமும் மிக விரைவில் கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவருமே ஏற்கனவே சிறந்த பாடகர்கள் என்பதால் இந்த படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து பாடுவார்கள் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்து வரும் புலி படத்தை பி.டி.செல்வகுமார் தயாரித்து வருகிறார். நட்டி என்ற நடராஜன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment