1st of January 2015
சென்னை:தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு நிறைவையும், எதிர்கால படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 2014-ன் சிறந்த படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு - ஆங்கில அகரவரிசை அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கலாம். அதை கீழே கருத்துப் பகுதியில் பதியலாம்.
பர்மா
கார் திருட்டு, கார் பறிமுதல் என்ற அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக் களத்தில் புகுந்து விளையாடிய புத்தம் புது படைப்பு இது. 98 நிமிடங்களில் கதை சொன்ன விதம், இயல்புத் தன்மை, விறுவிறுப்பு, திரை மொழி முதலானவற்றில் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு இது. சரியான நேரத்தில் சரியான உத்தியுடன் ப்ரொமோஷன்ஸ் செய்யப்பட்டிருந்தால், சாதாரண ரசிகர்களிடமும் இப்படம் கவனத்தைக் கவர்ந்திருக்கக் கூடும். இந்த ஆண்டின் கவனிக்கத்தக்க புது முயற்சிகளுள் ஒன்று - பர்மா.
குக்கூ
எளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு நீளப் படமாக்கி இருந்தது 'குக்கூ'. கண் பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், பாடுகள், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம். புதுமுக இயக்குநர் ராஜுமுருகன் எதார்த்தமான திரைக்கதை அமைப்பில் கண் தெரியாத மாற்றுத்திறனாளிகளின் காதலை காமெடி கலந்து கூறியிருந்தார். மாற்றுத் திறனாளிகள் படம் என்றாலே சோகமாக இருக்கும் என்ற எண்ணத்தை முறியடித்த படம் 'குக்கூ'.
கோலி சோடா
இந்தாண்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்திய முதல் திரைப்படம் 'கோலி சோடா'. மிகக் குறைந்த பட்ஜெட், சுவாரசியமான திரைக்கதை, இமான் அண்ணாச்சியின் காமெடி கலந்த எதார்த்தமான வசனங்கள் என பார்ப்பவர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. எந்த நட்சத்திரமும் இல்லாமல் வெறும் 5டி கேமராவால் 10 பேருடன் கோயம்பேடு மார்க்கெட்டில் எடுத்த படமாக்கப்பட்ட படம். எளிமையானவர்கள் வலிமையானவர்களாக மாறுவதும், தனக்கான அடையாளம் தேடும் கருத்தும் எல்லாரையும் கவர்ந்தது. ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார்.
ஜீவா
கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது, திறமையானவர்கள் எவ்வாறு சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய படம் 'ஜீவா'. ஆர்யா மற்றும் விஷால் இணைந்து வெளியிட்டதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இப்படத்தில் காதல் காட்சிகளைக் குறைத்து, முழுமையாக கிரிக்கெட் வீரர்களின் தேர்வின் பின்னால் நடக்கும் அரசியலை முழுமையாக கூறியிருந்தால் இந்திய திரையுலகம் கவனித்தக்க படமாக இருந்திருக்கும்.
ஜிகர்தண்டா
ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் அக்கினிப் பரீட்சை என்பார்கள். அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாகத் தேறினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான 'ஜிகர்தண்டா' படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தின் முக்கியமான அம்சம் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட சினிமா மோகத்தின் மீதான கிண்டல். ரவுடியில் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரியில் இருக்கும் பெண் வரை சினிமா, சினிமாக்காரர்கள் என்றதும் வாயைப் பிளப்பதை இயக்குநர் ‘அசால்டாக’ காட்டியிருக்கிறார்.வசூல் ரீதியில் மிகப்பெரிய அளவில் போகவில்லை என்றாலும் பார்ப்பவர்களால் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்தும் காட்டினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
சினிமா கனவைத் துரத்தும் இளைஞர்கள் தங்கள் முதல் படத்தை எடுப்பதற்காகக் கதையைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படித் திரைக்கதையை உருவாக்குகிறார்கள்? சொந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால்களைத் தாண்டி அவர்கள் சினிமா கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம். இப்படத்தில் கதையே கிடையாது என்று வித்தியாசமாக விளம்பரப்படுத்தப்பட்ட படம். மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியிலும் வரவேற்பு கிடைத்தது.
காவியத்தலைவன்
மேடை நாடகக் கலைஞர்களை நிஜத்தில் பார்த்து ரசிக்க நமக்கு கொடுத்துவைக்கவில்லையே என்னும் ஏக்கம் ’காவியத் தலைவன்’ படத்தை பார்க்கும்போது அதிகரித்தது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தியதற்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம், படத்தை உருவாக்கிய விதத்தில் கவனம் ஈர்த்தது. ஆனால் வசூல் ரீதியில் படம் தோல்வியடைந்தது. திரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம் என்பதை நிரூபணம் செய்யும் படமாக காவியத் தலைவன் நல்லதொரு அனுபவத்தைத் தந்தது.
மெட்ராஸ்
தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த கார்த்தியை நிமிரச் செய்த படம் 'மெட்ராஸ்'. வடசென்னையில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெரிய சுவர். அதில் விளம்பரம் எழுத இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியும், அதனால் நடக்கும் கொலைகளும்தான் ‘மெட்ராஸ்’ படத்தின் மையம். கார்த்தி இப்படத்தில் ஒரு நாயகனாக இல்லாமல், கதாபாத்திரமாக பிரதிபலித்தது ப்ளஸ் ஆக அமைந்தது.
முண்டாசுப்பட்டி
புகைப்படம் எடுத்துக்கொண்டால் ஆயுள் குறையும் என்பது இரண்டு தலைமுறைக்கு முன்பு நம்மிடம் நிலவிவந்த (மூட)நம்பிக்கைகளில் ஒன்று. அதுதான் இப்படத்திற்கான அஸ்திவாரம். இந்தாண்டு படங்களின் வரிசையில் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம் இது ஒன்று தான். வழக்கமான சினிமா கதைக் களத்திற்கு மாற்றான ஒன்றைத் தேர்வுசெய்து நகைச்சுவை ததும்ப அதைக் காட்சிப்படுத்தியிருந்த விதத்தில் அறிமுக இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டு கிடைத்தது.
நெடுஞ்சாலை
நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களில் தொடரும் திருட்டு, அருகில் ஒரு காவல் நிலையம், அதன் அருகே ஒரு டெல்லி தாபா உணவகம்.. இந்தப் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப் பயணத்தைக் கொடுத்திருந்தார் இயக்குநர் கிருஷ்ணா. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வாங்கியவுடன் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. வெளியானதும், நெடுஞ்சாலை மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. நெடுஞ்சாலைத் திருட்டைச் சாதுர்யமாக காட்சிப்படுத்திய இயக்குநர், காதல், மனமாற்றம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.
பண்ணையாரும் பத்மினியும்
உயிரற்ற ஒரு பொருள் மீது மனிதர்களுக்கு ஏற்படும் இனம் தெரியாத பாசத்தையும் அதனால் ஏற்படும் பரிதவிப்பையும் அன்யோன்யமான காதலோடு கலந்து சொன்னது 'பண்ணையாரும் பத்மினியும்’. குறும்படமாக முதலில் வெளிவந்து, அதற்கு கிடைத்த வரவேற்பால் வெள்ளித்திரைக்கு வந்த படம் இது. திரைப்படமாக மக்களிடையே வரவேற்பு பெறாவிட்டாலும், விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. திருவனந்தபுரம், பெங்களூரு திரைப்பட விழாக்களில் இப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பிசாசு
பேய்ப் பட ரசிகர்களுக்கு வித்தியாசமான பேயை அறிமுகப்படுத்தும் படம் ‘பிசாசு’.பேய் என்று கொடூரமாக இருக்கும் என்பதை எல்லாம் விடுத்து பேய்க்குள்ளும் ஒர் ஈர மனம் உண்டு என்று கூறினார் இயக்குநர் மிஷ்கின். பாடல்களையும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமா அனுபவத்தைத் தர முனையும் மிஷ்கினின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.
சதுரங்க வேட்டை
ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம் எல் எம் என்று பல விதமான வடிவங்களில் மோசடிகளின் தன்மைகளை அவற்றின் செயல்முறைகளோடு அம்பலப்படுத்திய படம். லிங்குசாமி வாங்கியதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. விறுவிறுப்பான திரைக்கதை, விழிப்புணர்வூட்டும் சித்தரிப்பு ஆகியவை படத்தின் பலம். காட்சிகளில் நம்பகத்தன்மையையும் மெருகையும் கூட்டியிருந்தால் சிறந்த திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
தெகிடி
குற்றவியல் படிப்பு, துப்பறியும் களம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வெளிவந்த விறுவிறுப்பான திரில்லர். கதையோடு ஒன்றிய காதலையும் இணைத்திருந்தார். தெகிடி என்றால், வஞ்சம், சூது, ஏமாற்றுதல் என்றெல்லாம் பொருளாம். ஏமாற்றுவதைப் பற்றிய படம் ஏமாற்றவில்லை. வசூல் ரீதியிலும் இப்படத்திற்கு வெற்றி கிடைத்தது.
வெண்நிலா வீடு
வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் வெளியான இப்படம் பெண்களின் இரவல் நகை மோகத்தால் வரும் பிரச்சினைகள், ரியல் எஸ்டேட் திருட்டுத்தனங்கள் உள்ளிட்ட விஷயங்கள் விலாவாரியாகவும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் அலசப்பட்ட படம். குடும்பச் சூழலை மையப்படுத்தும் இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
Comments
Post a Comment