ரஜினியின் லிங்கா படத்தால் பல கோடி இழப்பு: பணத்தை திருப்பித்தர விநியோகஸ்தர்கள் கோரிக்கை!!!

19th of December 2014
சென்னை:நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 12ம் தேதி தமிழகம்  முழுவதும் வெளியான திரைப்படம் லிங்கா. இந்த படத்தை வேந்தர்  மூவீஸ் வெளியிட்டது. லிங்கா படத்தின் விநியோக உரிமையை  பெறுவதில் விநியோகஸ்தர்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. பல  கோடி கொடுத்து லிங்கா படத்தின் விநியோக உரிமையை பெற்றனர்.  திட்டமிட்டபடி கடந்த 12ம் தேதி எதிர்ப்புகளை மீறி லிங்கா படம்  வெளியிடப்பட்டது. ஆனால், விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்தபடி  வருமானம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  பல விநியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து புலம்பி  வந்தனர்.
 
இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், தென் ஆற்காடு, வட  ஆற்காடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த  விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக  கூறி தி.நகரில் உள்ள விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவனத்தை  நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து, மெரினா பிக்சர்ஸ்  உரிமையாளர் சிங்காரவேலன் கூறியதாவது: விஜய் பார்கவி  என்டர்டயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்  பாலாவிஸ்வநாதனிடம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 50  திரையரங்கின் விநியோக உரிமையை ரூ.8 கோடிக்கு வாங்கினேன்.
 
ஆனால் எதிர்பார்த்தபடி லிங்கா படம் வசூலை தரவில்லை. இதனால்  எனக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை அவர் தான்  பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.  விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவன உரிமையாளர்  பாலாவிஸ்வநாதன் கூறியதாவது: லிங்கா படம் வெளி வருவதற்கு முன்  ரஜினிகாந்த் எங்களிடம் படையப்பா படத்தை விட லிங்கா 10 மடங்கு  பெரிய படம். இந்த படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்  என்று கூறினார்.
 
இதை நம்பி நான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திரைப்பட  விநியோக உரிமையை ரூ.14 கோடிக்கு வாங்கினேன். அதேபோல் என்  தலைமையில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சார்பில்  ரூ.8 கோடியும், தென்ஆற்காடு, வட ஆற்காடு மாவட்ட விநியோகஸ்தர்  சார்பில் ரூ.6 கோடியும் மற்றும் செங்கல்பட்டு விநியோகஸ்தர் சார்பில்  ரூ.14 கோடி என மொத்த பணத்தையும் லிங்கா படம் வெளிவருவதற்கு  முன் வேந்தர் மூவீஸ் உரிமையாளர் எஸ்.மதனிடம் கொடுத்து லிங்கா  படத்திற்கான உரிமையை பெற்றோம்.
 
ஆனால் எதிர்பார்த்தபடி லிங்கா படம் ஓடவில்லை. எனக்கு மட்டும் இந்த  படத்தின் மூலம் ரூ.8 கோடியும், வட ஆற்காடு, தென் ஆற்காடு  விநியோகஸ்தருக்கு ரூ.4 கோடியும், திருச்சி, தஞ்சாவூர்  விநியோகஸ்தருக்கு ரூ.4 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த  பிரச்னையில் ரஜினி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் நான் தற்கொலை செய்வதை தவிர வேறு  வழியில்லை என்றார்.

Comments