17th of December 2014
சென்னை:தமிழக காங்கிரசில், குஷ்பு தலைமையில், புதிய கோஷ்டி ஒன்று உருவாகிறது. கட்சியில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்பும் போது, குஷ்புவையும் கலந்து பேச வேண்டும் என, காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை கூறியுள்ளதால், குஷ்பு தரப்புக்கென, 'கோட்டா' ஒதுக்கும்படி கேட்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னையில், 19ம் தேதி கூடும், தமிழக காங்கிரசின் செயற்குழு கூட்டத்தில், விவாதிக்கப்படும் என, காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.
தமிழக காங்கிரசில் நடிகை குஷ்புக்கு, செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குஷ்பு பேசிய முதல் கூட்டம் விருதுநகரில் நடந்தது. அடுத்ததாக, ராஜிவ் சிலை திறப்பு விழாவை ஒட்டி, ஊட்டியில் கூட்டம் நடந்தது. இரண்டு இடங்களிலும் கூடிய கூட்டத்தைப் பார்த்து, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனே அதிர்ந்து போயுள்ளார். ஏற்கனவே, கட்சியில் சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லக்குமார், பிரபு என, பல கோஷ்டிகள் உள்ளன. இந்த கோஷ்டிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. வாசன் இருந்த வரையில், அவரது கோஷ்டி தான் பலம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது அவர் வெளியேறி விட்ட நிலையில், சிதம்பரம் கோஷ்டி, முக்கிய கோஷ்டியாக கருதப்படுகிறது.
ஆனாலும், கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அவர்களுக்கு பலம் இல்லை. இந்த சூழலை பயன்படுத்தி, குஷ்பு தலைமையில் ஆதரவாளர்களை, அணி சேர்க்கும் முயற்சி துவங்கி இருக்கிறது. கட்சியில் தற்போது, 23 மாவட்ட தலைவர்கள் பதவி காலியாக உள்ளன. பொருளாளர் உள்ளிட்ட, மாநில நிர்வாகிகள் பதவிகளும் காலியாக உள்ளன. இந்த பதவிகளை பங்கிடுவதில் மோதல் வெடிக்கும் என்பதால், அதுபற்றிய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும், இளங்கோவன் தன் ஆதரவாளர்களை பொறுப்பாளராக நியமித்திருக்கிறார். அந்தளவோடு நிற்கும் இந்த நடவடிக்கையில், குஷ்புவுக்கென 'கோட்டா' கேட்கப்படுவதால், மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, குஷ்பு ஆதரவாளர்கள் கூறியதாவது:
குஷ்பு வருகையால் தான், கட்சிக்கு இப்போது புது தெம்பு கிடைத்துள்ளது. அதனால், குஷ்புவுக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் வேண்டும். அதற்கு, கட்சிப் பொறுப்புகள் வழங்கும்போது, அவருடைய ஆதரவாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு, குஷ்பு ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment