19th of December 2014
சென்னை:ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் 'ஐ' படத்தின் புத்தம் புதிய தியேட்டர் டிரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
வெளியான சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான ஹிட்டுகளை அந்த டிரைலர் பெற்றது.
செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட டீசரைவிட, இந்த தியேட்டர் டிரைலர் மிகவும் அசத்தலாக உள்ளது.
டிரைலரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியுமே மிரட்டலாக அமைந்துள்ளது. இந்தப் படம் நிச்சயம் ஷங்கரின் முந்தையப் படங்களை விட கதை விஷயத்திலும் படமாக்கப்பட்ட விதத்திலும் தரத்தின் அடிப்படையில் பல மடங்கு உயர்ந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஏற்கெனவே, 'ஐ' படத்தின் டீசர் யு டியூபில் ரசிகர்களால் பார்க்கப்பட்ட எண்ணிக்கையில் மிகப் பெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய டிரைலரும் பல சாதனைகளை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
'ஐ' டீசரை இதுவரை 91 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள். 'ஐ' படத்தின் புதிய டிரைலரால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
விஜய் நடித்த 'கத்தி' படம் வசூலில் பெரிய சாதனை புரிந்த நிலையில், விஜய்யின் ஒரே போட்டியாளரான அஜித்தின் படம் 'என்னை அறிந்தால்' பொங்கலுக்கு வெளிவருகிறது.
தற்போது 'ஐ' படமும் பொங்கலுக்கு வருவதால் 'என்னை அறிந்தால்' படம் 'ஐ' படத்தின் பிரம்மாண்டத்தையும், தொழில்நுட்ப சிறப்பையும் மீறி மாபெரும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில் விஜய் ரசிகர்கள் நேற்று இரவே 'ஐ' படத்தைப் பாராட்டி எழுதி, அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள்.
ஆனாலும், அஜித் ரசிகர்கள் விடாப்பிடியாக அவர்களது விவேகத்தைக் காட்டி வருகிறார்கள். 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற ஃபார்முலாவை விஜய் ரசிகர்கள் இந்த விஷயத்தில் கடை பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
Comments
Post a Comment