20th of December 2014
சென்னை:காந்தக்குரலுக்கு சொந்தக்காரர் கே.ஜே.ஜேசுதாஸ். அவரது மகன் விஜய் ஜேசுதாஸ் பாட வந்தபிறகு தான் பாட்டு பாடுவதை குறைத்துக்கொண்டார். நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு ‘நதிகள் நனைவதில்லை‘ படத்துக்கு ஜேசுதாஸ் 2 பாடல்கள் பாடி உள்ளார். இதுபற்றி பட இயக்குனர் பி.சி.அன்பழகன் கூறும்போது,‘காதல் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. முழுபடப்பிடிப்பும் கன்னியாகுமரியின் மூலை முடுக்கெல்லாம் படமாக்கப்பட்டிருக்கிறது. பிரணவ், மோனிகா ஜோடி.
இதில் ‘உன்னை நேத்து ராத்திரி‘ என்ற காதல் பாட்டும், ‘ஜீவனுள்ள போதே வாழ்க்கை...‘ என்ற 2 பாடல்களை கே.ஜே.ஜேசுதாஸ் பாடி இருக்கிறார். இந்த பாடல்களை புலமைப்பித்தன் எழுதி உள்ளார். சவுந்தர்யன் இசை அமைத்திருக்கிறார். நீண்ட நாள் ஜேசுதாஸுடன் நட்பாக பழகி வருகிறேன். அந்த நட்புக்காக இப்பாடல்களை பாடி இருக்கிறார். 2 பாடல்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே சம்பளம்பெற்றார். மற்றொரு பாடலை இலவசமாகவே பாடினார். தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சாய்பாபா கோயில் கன்னியாகுமரியில்தான் உள்ளது. இதுவரை அங்கு படப்பிடிப்பு நடந்தது கிடையாது. முதன்முறையாக இப்படத்துக்காக அங்கு படப்பிடிப்பு நடத்தி உள்ளேன்‘ என்றார்.
Comments
Post a Comment