லிங்கா விமர்சனம்: லிங்கா ரஜினிக்காக மட்டும்!!!

12th of December 2014
சென்னை:படையப்பா’விற்குப் பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறது ரஜினி, கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. அதோடு ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு 4 வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் ரஜினி தரிசனம். என்ன செய்திருக்கிறார் ராஜா லிங்கேஸ்வரன்?

கதைக்களம்

சோலையூர் கிராமத்திலிருக்கும் அணையைப் பார்வையிட வரும் அதிகாரியான பொன்வண்ணனை ‘அணை பலவீனமாக இருக்கிறது’ என சான்றிதழ் கொடுக்க வற்புறுத்துகிறார் பணத்தாசை பிடித்த எம்.பி.யான ஜெகபதி பாபு. ஆனால், ‘இன்னும் 1000 வருடங்களுக்கு அணை உறுதியாக இருக்கும்’ எனக்கூறி ஏற்கெனவே சான்றிதழில் கையெழுத்திட்டாகக பொன்வண்ணன் சொல்ல, அவரைக் கொலை செய்கிறார்கள். சாகும் தருவாயில், சோலையூர் பெரிய மனுஷன் விஸ்வநாத்திடம் ‘‘அணைக்கோயிலைத் திறந்தால்... ஊரைக் காப்பாத்தலாம்’’ என சொல்லிவிட்டு மரணமடைகிறார் பொன்வண்ணன்.

ராஜா லிங்கேஸ்வரனால் (ரஜினி) கட்டப்பட்ட அந்த கோயிலைத் திறக்க, சென்னையில் இருக்கும் அவரின் பேரனான ‘லிங்கா’வை (ரஜினி) அழைத்து வருகிறார் அனுஷ்கா.
அதன் பிறகு ஃப்ளாஷ்பேக்காக விரிகிறது ராஜா லிங்கேஸ்வரன் அந்த அணைக் கோயிலைக் கட்டியதற்கான காரணம். எதற்காக அந்த கோயிலைத் திறக்க வேண்டும்? அங்கு என்ன இருக்கிறது? ஜெகபதி பாபு அணை பலவீனமாக இருக்கிறது என எதற்காக பொய்யான சான்றிதழ் தயாரிக்க முற்பட்டார்? லிங்கா ரஜினி என்ன செய்தார்? என்பதற்கு படத்தின் முடிவில் விடை கிடைக்கிறது.

படம் பற்றிய அலசல்

நேரடியாக கதைக்குள் நுழைந்துவிட்டு ‘லிங்கா’ ரஜினியை அறிமுகம் செய்கிறார்கள். கதைக்கு சம்பந்தமேயில்லையென்றாலும் ‘லிங்கா’ ரஜினிக்கான காட்சிகளை வேண்டுமென்றே ஆரம்பத்தில் கொஞ்சம் சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும் சந்தானத்தின் காமெடியும், ரஜினி செய்யும் சேட்டைகளும் ரசிக்கும்படி இருக்கின்றன.
‘ராஜா லிங்கேஸ்வரனு’க்கான ஃப்ளாஷ்பேக் மட்டுமே 2 மணி நேரத்திற்கும் மேல் செல்கிறது. மறுபடியும் க்ளைமேக்ஸில்தான் ‘லிங்கா’ ரஜினியைக் காட்டுகிறார்கள். ‘லிங்கா’ ரஜினிக்கு கொடுத்த ‘பில்டப்’ அளவுக்கு, படம் முழுக்க வரும் ‘லிங்கேஸ்வரன்’ ரஜினிக்கு ‘ஓபனிங்’ வைக்கவில்லை. ஆனாலும், ஒரு சில இடங்களில் கண்கலங்க வைத்திருக்கிறார் ராஜா லிங்கேஸ்வரன்.

ரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதால் அதை விட்டுவிடலாம். ஆனால், ஒரு சில காட்சிகள் ரொம்பவும் மெதுவாகவும், நீளமாகவும் இருப்பது பொறுமையைச் சோதிக்கிறது. ரஜினி படங்களில் பாடல்கள் எப்போதுமே பெரிய பலமாக இருக்கும். இப்படத்தில் ‘மோனா...’, ‘சின்ன சின்ன நட்சத்திரம்...’ பாடல்கள் மட்டுமே வசீகரிக்கின்றன.
‘ரஹ்மானுக்கு போதிய நேரம் கொடுக்கப்படவில்லையோ’ என யோசிக்க வைக்கிறது பின்னணி இசை. ரத்னவேலுவின் கேமரா, அணை செட்டுகளை சூப்பராக ‘கவர்’ செய்திருக்கிறது. பாடல்களிலும், அணை கட்டுமானப் பணி காட்சிகளிலும் கலை இயக்கமும் பெரிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

ரஜினிக்கென்றே உருவாக்கப்பட்ட வசனங்களைப் பேசும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டர் அதிர்கிறது. அதற்குக் காரணம் வசனம் அல்ல... ரஜினி! இந்த வயதிலும் மனிதர் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என வியக்க வைக்கிறார். அதிலும் ‘ராஜா லிங்கேஸ்வரன்’ அதகளம் பண்ணியிருக்கிறார்.
அனுஷ்கா, சோனாக்ஷி இருவரும் ஆளுக்கொரு பாடலில் ‘கிளாமர்’ குயின்களாக வந்துபோவதோடு, கதையை நகர்த்துவதற்கும் பயன்பட்டிருக்கிறார்கள். அனுஷ்கா அழகு தேவை! சோனாக்ஷி எக்ஸ்பிரஷன் குயின்!

சந்தானம் கிடைத்த ‘கேப்’பில் கிடா வெட்டியிருக்கிறார். படம் முடிந்ததும் கே.எஸ்.ரவிக்குமார் என்ட்ரி தர, ‘‘என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன்... இவருதாம்ப்பா... ஃபினிஷிங் குமாரு’’ என சந்தானம் சொல்லும்போது ரசிகர்களிடத்தில் வெடிச்சிரிப்பு. இன்னும் ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் படத்திலிருக்கின்றன. அந்தந்த கேரக்டருக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறார்கள்.

பலம்
1. சூப்பர்ஸ்டார் ரஜினியும், அவர் பேசும் பஞ்ச் வசனங்களும்
2. தமிழில் இதுவரை சொல்லப்படாத அணை சம்பந்தப்பட்ட கதைக்களம்
3. ஒளிப்பதிவு

பலவீனம்
1. வலுவில்லாத, மெதுவாக நகரும் திரைக்கதை
2. படத்தின் நீளம்
3. பாடல்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்காதது.
4. ரஜினி படத்திற்கே உரிய ‘மாஸ்’ காட்சிகள் ரொம்பவும் குறைவாக இருப்பது.

மொத்தத்தில்...
‘முத்து’, ‘படையப்பா’வைப்போல் தலைவர் இதிலும் அதகளம் பண்ணியிருப்பார் என்ற எதிர்பார்ப்போடு ‘லிங்கா’விற்கு வரவேண்டாம்.
ஏனென்றால் இந்த ‘லிங்கா’வின் கதைக்களம் வழக்கமான ரவிகுமார் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது.
அதோடு ரஜினியின் உடல்நிலையும் 15 வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல் இப்போது கிடையாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனாலும்... ‘ராஜா லிங்கேஸ்வரனு’க்காக நிச்சயம் ஒரு ‘விசிட்’ அடிக்கலாம்.

Comments