3D, 3L, 34H, 1.4M, 42K - இது ‘என்னை அறிந்தால்’ கணக்கு!!!

5th of December 2014
சென்னை:எதிர்பார்க்கும் ஒரு விஷயத்தை, அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகத் தரும்போது அதற்கு கிடைக்கும் வரவேற்பே தனிதான். அதற்கு சமீபத்திய உதாரணம், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் இவைதான்.

உலகளவில் ‘தல55’ ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்தே அதன் தலைப்பை வெளியிட வைததார்கள் அஜித் ரசிகர்கள். ஒவ்வொருவரும் ‘இதுதான் டைட்டில்லா’க இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தவேளையில், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அதற்கு ‘என்னை அறிந்தால்’ என டைட்டில் வைத்து முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்தார் கௌதம். அதன்பின்னர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தபோது சமூக வளைதளங்களில் அது ஒரு கலக்கு கலக்கியது.


இந்நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி காலையில் ’டிசம்பர் 4’ஆம் தேதி டீஸர் ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளிவந்ததும், அஜித் ரசிகர்கள் #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரென்ட் செய்யத் தொடங்கினார்கள். 3ஆம், 4ஆம் தேதிகளில் இந்திய அளவில் இந்த டிரென்ட் முதலிடத்தில் இருக்க, 12 மணிக்கு டீஸர் வந்தபோது உலகளவிலான டிரென்டிலும் இது இடம்பிடித்துள்ளது. டீஸர் தந்த உற்சாகத்தில் இப்போது வரை தொடர்ந்து 3வது நாளாக இந்த ஹேஷ்டேக்கை இந்தியளவில் டிரென்டில் வைத்திருக்கிறார்கள். தென்னிந்தியா சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை. அதோடு இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட்களை செய்திருக்கிறார்கள் ‘தல’ ரசிகர்கள்.

இப்போது டீஸர் செய்திருக்கும் சாதனையைப் பார்க்கலாம். டிசம்பர் 4ஆம் தேதி 12.01க்கு வெளியிடப்பட்ட ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியிட்ட 30 நிமிடங்களிலேயே 1 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது. தொடர்ந்து 22 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த படங்களில் ஐ, தலைவா, கோச்சடையான் ஆகியவற்றோடு ‘என்னை அறிந்தால்’ படமும் இணைந்திருக்கிறது. (ஆனால், ‘ஐ’ படம் 24 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது இப்போது வரை முறியடிக்க முடியாத சாதனையாகவே இருக்கிறது.)

இப்போது 33 மணி நேரம் முடிந்திருக்கும் நிலையில் ‘என்னை அறிந்தால்’ டீஸரை இதுவரை கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதோடு கிட்டத்தட்ட 42 ஆயிரம் பேர் ‘லைக்’கும் செய்திருக்கிறார்கள். இது தென்னிந்திய சினிமாவிலேயே முதல்முறையாக எட்டப்பட்டுள்ள மைல்கல். இதற்கு முன்பு ஷங்கரின் ‘ஐ’ படத்தின் டீஸரை இதுவரை 41,400 பேர் ‘லைக்’ செய்துள்ளதே சாதனையாக இருந்தது. ‘ஐ’யை முந்தி ‘என்னை அறிந்தால்’ 34 மணி நேரத்தில் ‘லைக்’கில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்திய அளவில் படங்களின் டீஸர், டிரைலர் வீடியோ லைக்கில் ‘டாப் 10’ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது ‘என்னை அறிந்தால்’.

ஆக மொத்தம், 3 நாட்களில் (3D) 3 லட்சத்திற்கும் (3L) மேற்பட்ட ‘ட்வீட்’கள் செய்யப்பட்டு, டீஸர் வெளியான 34 மணி (34H) நேரத்தில் 1.4 மில்லியன் (1.4M) பார்வையாளர்களையும் 42 ஆயிரம் (42K) ‘லைக்’குகளையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது ‘என்னை அறிந்தால்’. இன்னும் சில சாதனைகளை இந்த டீஸர் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments