20th of November 2014
சென்னை:லிங்கா டிசம்பர் 12 உறுதி செய்யப்பட்டதால் அதற்குமுன் அவசர அவசரமாக தங்கள் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நவம்பரில் ஐ வெளியாகும் என்று தயங்கியவர்களும் இப்போது சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.
நாய்கள் ஜாக்கிரதை
வைக்கிற அடியெல்லாம் சறுக்குதே என்று சிபிராஜ; நிதானித்து 100 -க்கும் அதிகமான கதைகள் கேட்டு தேர்வு செய்த படம், நாய்கள் ஜாக்கிரதை. சத்யராஜ்தான் படத்தை தயாரித்துள்ளார். கதையில் அவ்வளவு நம்பிக்கை.
போலீஸ்காரரான சிபிராஜ் ஒரு நாயின் துணையுடன் சில கொலைகளை துப்பறிவதுதான் படத்தின் ஒன்லைன். என்னைவிட நாய்க்குதான் படத்தில் முக்கியத்துவம், அதனால்தான் பெயரையே நாய்கள் ஜாக்கிரதை என்று வைத்தோம் என கூறியிருக்கிறார் சிபி.
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படம் சிறந்த க்ரைம் த்ரில்லராக இருப்பதற்கான குணநலன்கள் ட்ரெய்லரில் தெரிகிறது. நெருடுவது, குழந்தைத்தனமான லவ் சீக்வென்ஸ். கொடுத்த காசுக்கு நியாயம் செய்வார்கள் என்ற நம்பிக்கையை ரிலீஸுக்கு முன்பே ஏற்படுத்தியிருக்கிறார்கள். சிபியின் காத்திருப்பு வெற்றியுடன் தொடங்க வாய்ப்புள்ளது.
வன்மம்
விஜய் சேதுபதி, யாமிருக்க பயமே கிருஷ்ணா நடித்துள்ள படம். எப்போதோ வரவேண்டிய படம், தயாரிப்பாளாரின் இன்னொரு படத்தால் தடைபட்டு நாளை திரைக்கு வருகிறது.
நகமும் சதையுமாக இருக்கும் நண்பர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் எதிரிகளாக மாற நேர்கிறது. அது ஏன்? அதன் பிறகு நடந்தது என்ன? மீண்டும் நகமும் சதையுமானார்களா? இதுதான் படத்தின் கதை.
நாஞ்சில் நாட்டில் முழுப் படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெய்கிருஷ்ணா. படத்தில் சுனேனா பாவாடை கட்டி குளிக்கும் காட்சி ஒன்றும் வருகிறது.
விஜய் சேதுபதி ஆக்ஷன் ஹீரோவாகியிருக்கும் படம். அவருக்கென்று ஒரு எதிர்பார்ப்பு திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் உள்ளது. அதனை பூர்த்தி செய்தால் வன்மம் ஜெயமாகலாம்.
காடு
கான்க்ரிட் காடுகளில் வாழும் நமக்கு நிஜ காடுகளில் வசிக்கும் மனிதர்களின் வலி தெரிவதேயில்லை. அடுத்த சேமிப்பைப் பற்றி நாம் யோசிக்கும் போது அவர்கள் அடுத்தவேளை உணவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை பதிவு செய்திருப்பதுதான் காடு.
இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம் காடு குறித்து சொல்லும்போது சிலிர்ப்பாகதான் இருக்கிறது. கான்க்ரிட் காடு என்று அவர் சொல்லும் நகரத்துக்குள்தான் அன்றாடங்காய்ச்சிகள் அதிகம் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்காடித்தெருக்களும் அங்கிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. நாம் சொல்லவிழையும் ஒரு தரப்பை உயர்த்திகாட்ட எதிர்தரப்பை மட்டம் தட்டுகிற இந்தப் போக்கு இல்லாமல் காடு இருந்தால், சந்தோஷப்படலாம்.
ஆள் படத்துக்குப் பிறகு விதார்த் அதிகம் எதிர்பார்க்கும் படமிது. சமுத்திரகனியும் இருக்கிறார்.
மலையும் மலைசார்ந்த இடங்களும்தான் கதைக்களம். சமஸ்கிருதி என்ற மலையாள நடிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
காடு பயமுறுத்துமா வசீகரிக்குமா என்பது நாளைதான் தெரியும்.
இந்தப் படங்கள் தவிர விழி மூடி யோசித்தால், சின்னஞ் சிறிய வண்ணப் பறவை ஆகிய நேரடி படங்களும் நிஞ்சா 2 டப்பிங் படமும் நாளை வெளியாகின்றன.
Comments
Post a Comment