டிசம்பர் 24: சிம்புவின் வாலு திரைப்படம் உறுதி!!!

22nd of November 2014
சென்னை:சிம்புவை வைத்து 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் வாலு. படம் ஆரம்பித்த போதே 2013ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரப்படும் என்று தான் ஆரம்பித்தனர்.
 
ஆனால் படம் அறிவித்தபடி வெளியாகவில்லை. நிதிப் பிரச்னை, சிம்பு-ஹன்சிகா காதல் முறிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. பிறகு இயக்குனரின் முயற்சியால் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வழியாக முடிக்கப்பட்டது.

இருந்தும் படம் வெளியாவதற்குரிய எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில் வாலு படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
படத்திற்கு ஏற்பட்ட நிதிப் பிரச்னை தீர்வடைந்ததைத் தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம். இதனால் எப்படியும் இந்த முறை படத்தை கண்டிப்பாக குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்துவிடுவார்கள் எனத் தெரிகிறது. இது குறித்து சிம்பு டுவிட்டரில் கூறியிருப்பதாவது, உங்களது ஒவ்வொரு பதிவையும் பார்த்து வருகிறேன், கண் கலங்க வச்சிட்டீங்க. நன்றி நண்பர்களே என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் போடா போடி. கடந்த 2012ம் ஆண்டு வந்த இந்தப் படத்தோடு சரி, அதன் பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை. இடையில் அவர் கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் மட்டுமே வெளியாகி ரசிகர்களை ஆறுதல் படுத்தின. இந்நிலையில் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிம்புவை மீண்டும் ஹீரோவாக திரையில் பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு இது புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

Comments