தமிழ்த் திரையுலகில் இந்த ஆண்டு எத்தனை படங்கள் வெற்றி பெற்றது என்பதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும்!!!

15th of October 2014
சென்னை:தமிழ்த் திரையுலகில் இந்த ஆண்டு ஒரு பக்கம் அதிகமான படங்கள் வந்து கொண்டிருக்கிறதே என ஆச்சரியமாகப் பார்க்க வைத்தாலும் அதில் எத்தனை படங்கள் வெற்றி பெற்றது என்பதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். இந்த ஆண்டில் இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன.

அஜித், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விமல் உள்ளிட்ட பலர் நடித்த படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் முன்னணி நடிகர்கள் என்று எடுத்துக் கொண்டுப் பார்த்தால் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படமும், கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படம் மட்டும்தான் மொத்த விதத்திலும் அதாவது இசை உரிமை, தியேட்டர் உரிமை, சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை என அனைத்திலுமே மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
 
மற்ற நடிகர்களின் படங்கள் லாபகரமாகவே அமையவில்லை என அதிர்ச்சி தரும் தகவல்தான் நமக்குக் கிடைத்துள்ளது.சிறிய படங்கள் என்று பார்த்தால் புகோலி சோடா, மஞ்சப் பை, சதுரங்க வேட்டைபூ ஆகிய படங்கள் தயாரிப்புச் செலவோடு கணக்கிட்டுப் பார்த்தால் மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்த படங்களாகவே அமைந்துள்ளன. அப்படியென்றால் 160 படங்களுக்கு ஐந்தே ஐந்து படங்கள்தான் வியாபார நோக்கத்தில் லாபமாக அமைந்த படங்களாக உள்ளன. இன்னும் இரண்டரை மாத காலம் உள்ள நிலையில் மேலும் சுமார் 50 படங்களாவது வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
 
அவற்றில் பெரும்பாலான படங்கள் பெரிய படங்கள்தான். விஜய், விஷால், விக்ரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் நடித்துள்ள புதிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. இந்தப் படங்கள் லாபகரமாக அமைந்தால்தான் தமிழ் சினிமாவிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். வெளிவரும் படங்களின் எண்ணிக்கை பெரிதல்ல, தரம்தான் பெரிது என்பதை இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் மற்றவர்களுக்கும் ஒரு பாடத்தை உணர்த்தியுள்ளதாகத்தான் நாம் கருத வேண்டும்.

Comments