பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னையில் மரணம்!!!

24th of October 2014
சென்னை: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்த  அவரை உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு நுரையீரலில் சளி தொற்று உருவானது. இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. பித்தப் பையிலும் கல் இருந்தது. எனவே டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.


இருந்த போதிலும், எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.  

நாடக நடிகராக இருந்து 1948-ல் சினிமாவில் அறிமுகமான  எஸ்.எஸ்.ராஜேந்திரன் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, கதாநாயகர்களாக நடித்த காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் நிறைய படங்களில் நாயகனாக நடித்தார்.

‘முதலாளி’, ‘மனோகரா’, ‘ரத்தக்கண்ணீர்’, ‘பராசக்தி’, ‘சிவகங்கை சீமை’, ‘ராஜா தேசிங்கு’, ‘குமுதம்’, ‘ஆலயமணி’, ‘காஞ்சித் தலைவன்’, ‘மணி மகுடம்’, ‘பூம்புகார்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1962-ல் தேனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். திராவிட இயக்க கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர்.

Comments