'அம்மா' திரையரங்கம் சென்னையில் 5 இடங்களில் தொடங்கப்பட உள்ளன!!!

31st of October 2014
சென்னை:சென்னையில் ஐந்து இடங்களில் அம்மா திரையரங்குகள் தொடங்கப்பட உள்ளன. ஒரே நேரத்தி்ல் 250 பேர் பார்க்கும் வசதியுடன் திரையரங்குகள் அமைக்கப்படுகிறது.

குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 'அம்மா' திரையரங்குகளை அமைக்க சென்னை மாநகராட்சியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்குகள் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளனர்.

முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் திரையரங்குகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தில் திரையரங்குகள் கட்டுவது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு செய்து ஆலோசனைகளை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 'அம்மா' திரையரங்குகள் செயல்பட உள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய மண்டல அலுவலகம்-3 இருந்த இடம், மின்ட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கிடங்கு இருந்த பகுதி, வளசரவாக்கத்தில் குடிநீர் வாரியம் பம்பு செட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம், கோடம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான யூனிட் அலுவலகம், கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் ஆகிய 5 இடங்களில் 'அம்மா' திரையரங்குகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்ட இடங்களில் 2 ஏக்கரிலிருந்து 8 ஏக்கர் வரை இடங்கள் உள்ளன. இவற்றில் தனியார் ஷாப்பிங் மால்கள் போன்று ஒரே இடத்தில் 4 முதல் 8 திரை அரங்குகள் வரை அமைக்கப்பட உள்ளன. கட்டிட கலை நிபுணர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஓரிரு மாதங்களில் கட்டுமானப்பணியை தொடங்கி 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணியை முடித்து 'அம்மா' திரையரங்குகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எப்படியும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 முதல் 100 திரைகள் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 200 முதல் 250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்பட உள்ளன.
 
இந்த 'அம்மா' திரையரங்குகளில் தனியார் திரையரங்குகளில் வெளியாவது போன்று புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவதுடன், தனியார் திரையரங்கு கட்டணம் போன்று இல்லாமல் ஏழைகளும் சினிமா பார்க்கும் வகையில் தரமான வசதியுடன், குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டண விபரத்தை தமிழக அரசு அறிவிக்க உள்ளது" என்று தெரிவித்தனர்.

Comments