'சூதாடி'க்கு முன்னர் 'விசாரணை': வெற்றிமாறன் முடிவு!!!

29th of September 2014
சென்னை:தனுஷ் நடித்து வரும் 'சூதாடி' படத்திற்கு முன்னர் 'விசாரணை' படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் வெற்றிமாறன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'சூதாடி'. முதலில் பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட படத்தில் தனுஷூடன் பார்த்திபனும் நடித்து வந்தார். பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
 
அனேகன்', 'ஷமிதாப்', 'வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்களில் மும்முரமாக பணியாற்ற ஆரம்பித்தார் தனுஷ். இதனால், வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
த்தகவல்களை பொய்யாக்கும் விதமாக, 'பொறியாளன்' பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் "நானும், தனுஷும் இணையும் படம் கைவிடப்படவில்லை. படத்திற்கு 'சூதாடி' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம்" என்று கூறினார்.
 
இந்நிலையில், 'சூதாடி' படத்திற்கு முன்னரே 'அட்டகத்தி' தினேஷை வைத்து தனுஷ் தயாரிப்பில் 'விசாரணை' என்னும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். 'சூதாடி'க்கு முன்னரே இப்படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படம் 2 மணி நேர படம் இல்லை. ஹாலிவுட் படங்களை விடவும் குறைவான நேரம் கொண்டதாக, ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கு ஓடும் படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மிகக் குறுகிய நேரம் கொண்டதாக வெளிவரும் முதல் வெள்ளித்திரை படமாக 'விசாரணை' இருக்கும் என்கிறார்கள் வெற்றிமாறன் வட்டாரத்தில்.
'விசாரணை' முடித்த கையோடு தனுஷ் நடிக்கும் 'சூதாடி' படத்தை முடித்து கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் வெற்றிமாறன். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக லட்சுமி மேனன், பார்த்திபனுக்கு ஜோடியாக மீனாட்சி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Comments