ஜீவா விமர்சனம்: இயக்குனர் சுசீந்திரன் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸர்!!!

26th of September 2014
சென்னை:இயக்குனர் சுசீந்திரன் கடந்த வருடம் இரண்டு வெற்றி படங்களை இயக்கினார். அதில் பாண்டியநாடு சூப்பர் ஹிட். தற்போது இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.  இதில் வெண்ணிலா கபடி குழு புகழ் விஷ்ணு ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக ஒரே படத்தில் இளைஞர்களின் கனவு கன்னியான “வருத்தபடாத வாலிபர் சங்கம்” புகழ் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவர்கள் போக முக்கியவேடங்களில் லக்ஷ்மன், சூரி, சார்லி, டி.சிவா போன்றவர்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இதே “ஜீவா” என்ற தலைப்பில் 1988 -இல் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் கதை கிரிக்கெட் விளையாட்டை பற்றியது. நமது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு தான் உயிர். மார்டன் சிட்டி முதல் சிறிய குக்கிராமங்கள் வரை நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு தான் முதன்மை. வீட்டின் மொட்டைமாடி முதல் வற்றிப்போன குளம், ஸ்கூல் கிரௌண்ட் என பார்க்கும் இடமெங்கும் கிரிக்கெட் மயம் தான். இப்படி கிரிக்கெட்டின் மீது உயிராய் இருக்கும் நாம், நமது தமிழகத்தில் இருக்கும் “தமிழ்நாடு கிரிக்கெட் அசொசியெஷனில்” நடந்த, நடந்துகொண்டிருக்கும் மிக பெரிய மகாபாதக துரோகத்தை இது வரை தெரிந்துகொள்ளவில்லை. அந்த அராஜகசெயலை தோலுரித்து காட்டுகிறது
 
இந்த படத்தின் கதை. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த நாயகன் விஷ்ணு ஐந்து வயது முதல் கிரிகெட் விளையாட ஆரம்பிக்கிறார். இந்த விளையாட்டின் மேல் உள்ள காதலால் நல்ல தேர்ந்த கிரிகெட் பிளேயராக இளம் வயதில் உருவெடுக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது விஷ்ணுவின் பக்கத்துக்கு வீட்டிற்கு குடிவருகிறார் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. இவருக்கு ஹீரோமீது காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க இது இவர்கள் பெற்றோர்களுக்கு தெரியவர அந்த கனமே இருவரும் பிரிகின்றனர். காதல் தோல்வியின் வேரிக்தியில் இருக்கும் மகனை இதில் இருந்து மீண்டு வர விஷ்ணுவின் அப்பா அவரை ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துவிடுகிறார். அதன்பிறகு காதலை மறந்து தனக்கு பிடித்த கிரிக்கெட்டில் தன் திறமையால் படிப்படியாக முன்னேறி ரஞ்சி ட்ராபிக் டீமில் செலக்ட் ஆகிறார் விஷ்ணு.
 
மறுபடி நாயகி ஸ்ரீதிவ்யா விஷ்ணுவின் வாழ்வில் வருகிறார். ரஞ்சி ட்ராபி போட்டியில் தன் திறமையால் ஜொலித்தால் தான் அடுத்து இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு என்ற கனவுகளுடன் இருக்கும் நாயகனுக்கு ஒரு அநீதி நடக்கிறது. அதில் இருந்து இவர் மீண்டாரா இல்லையா? நாயகி ஸ்ரீதிவ்யாவை கைபிடித்தாரா இல்லையா? இந்திய அணிக்காக விளையாடினாரா இல்லையா என்பதை திரையில் பார்க்கவும். கிரிகெட்டை வைத்து ஏற்கனவே பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மறுபடியும் கிரிக்கெட் சம்பந்தபட்ட படமா என்று தோன்றியது படம் பார்பதற்கு முன்பு.ஆனால் இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தை அற்புதமாக எடுத்துள்ளார். கதை சொன்ன விதம் அருமை. நாயகனின் ஐந்து வயதில் அராம்பித்து படிப்படியாக எப்படி இவன் பெரிய கிரிக்கெட் பிளேயராக உருவெடுக்கிறான் என்பதை எதார்த்தமாக, ஹீரோயிசம் இல்லாமல் காட்டியுள்ளார். 
 
 நிஜத்தில் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணிக்கு இது வரை 16 வீரர்கள் விளையாடியுள்ளனர் அதில் 14 பேர் ஒரே ஜாதியை (மேல்தட்டு) சேர்ந்தவர்கள். தமிழ்நாடு கிரிக்கெட் அசொசியெஷனிலும் இதே மேல்தட்டு ஜாதியை சேர்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செய்கிறார்கள் என்ற ஒரு உண்மையை உலகுக்கு சொன்னதிற்காக ஒரு பெரிய சலியூட் சுசீந்திரன். இந்த படத்தை பார்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக ஒருவித கோபம் வரும். அந்த கோபம் தான் படத்தின் வெற்றி. இனி இப்படி ஒரு துரோகம் தமிழ்நாட்டில் நடக்க கூடாது. நாயகனாக விஷ்ணு விஷால். ஏற்கனவே இவர் ஒரு கிரிக்கெட் பிளேயர் தான் அதனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ரொம்ப சுலபம். நல்லவேளை இயக்குனர் கிரிக்கெட்டே விளையாட தெரியாத நாயகனை வைத்து இயக்கி இருந்தால் இப்படம் இவ்வளவு நன்றாக வந்திருக்காது. இப்படத்திற்கு விஷ்ணு தான் சரியான சாய்ஸ். நாயகியாக ஸ்ரீ திவ்யா அழகாவும் இருக்கிறார் நடிக்கவும் செய்கிறார்.
 
சூரி கிரிக்கெட் பிளேயராம், காமெடிக்கு யூஸ் பண்ணிருகாங்க இவரை. கிரிக்கெட்டீமில் காமெடி பீஸ் இவர்தான்.ஒருசில இடங்களில் ஜொலிக்கிறார். இன்னும் காட்சிகள் இருந்தால் சூரி புகுந்து விளையாடியிருப்பார். சார்லி, மதுசூதனன், லக்ஷ்மன்,விஷ்ணுவின் அப்பா கேரக்டரில் நடித்தவர் என அனைவரும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர். டி .இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. அதிலும் வைரமுத்துவின் வரிகளான “ஒவ்வொன்றாய் திருடுகிறாய்” பாடல் சூப்பர். பிண்ணனி இசையிலும் புகுந்து விளையாடியுள்ளார் இமான். இயக்குனர் சுசீந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் மதி தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவு துல்லியம் அதிலும் கிரிக்கெட் மேட்ச்சை எடுத்த விதம் அருமை. அண்டனியின் எடிட்டிங் கனகச்சிதம் ஆகமொத்தத்தில் இந்த “ஜீவா”, தமிழ்நாட்டு கிரிக்கெட்டில் திறமையை விட ஜாதி தான் விளையாடுகிறது என்பதை அப்பட்டமாக வெளியுலகிற்கு சொன்ன அற்புதமான திரைப்படம். "ஜீவா" – இயக்குனர் சுசீந்திரன் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸர்!

Comments